முஹம்மது நபி பிறந்த புனித பூமியான மக்கா நகருக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சத்யாகிரகப் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி., ஹுசைன் தல்வாய் அறிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி பாராளுமன்ற மாநிலங்களவையில் 'அரசியலமைப்புச் சட்டத்துக்கு அர்ப்பணிப்பு' என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஹுசைன் தல்வாய் கூறியதாவது:-
முன்பொருமுறை பூரி ஜகன்நாதர் ஆலயத்தை நான் பார்க்க விரும்பினேன். அதிகாலையில் எழுந்து, குளித்துமுடித்து புறப்பட தயாரானபோது, அந்த ஆலயத்தில் முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை என்று சிலர் தெரிவித்தனர். இதனால், மனமுடைந்து நான் கவலைப்பட ஆரம்பித்தேன். இதேபோல், மக்கா நகரிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, மிகவும் தவறான செயலாகும்.
மக்கா நகரில் முஸ்லிம் அல்லாதவர்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுவேன். இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாடலாம், பெருமிதத்துடன் வாழலாம் என்பதே நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்திய மிகப்பெரிய சாதனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments