Subscribe Us

header ads

இரைப்பை நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் இரண்டு விரல்கள் அகற்றப்பட்ட கொடூரம்

இரைப்பை நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் வலது கையின் இரண்டு விரல்கள் (பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்) வெட்டி அகற்றப்பட்டு அவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவமொன்று தங்கொட்டுவ கோணவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு தங்ககொட்டுவ, கோணவில மனந்துறை மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஜயகொடிஆராய்ச்சிகே ஜயவிக்ரம என்பவரே முகங்கொடுத்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

எனக்கு ஏற்பட்டிருந்த வயிற்று வலி காரணமாக தங்கொட்டுவ வைத்தியசாலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கப்பட்டேன். அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன். அதன் பின்னர், சத்திரசிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்.

எனக்கு, மலம் வெளியேறுவதற்காக உடலுக்கு வெளியில் பையொன்று பொருத்தப்பட்டிருந்தது. எனினும், அந்தப் பையை அகற்றிக்கொண்டு கடந்த ஜுன் மாதம் 13ஆம் திகதியன்று சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். அந்தப் பையை அன்று அகற்றியமையால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். எனக்கு வருத்தம் கூடிவிட்டது. 

வருத்தம் குறைவதற்காகவும் காயம் ஆறுவதற்காகவும் அக்கையின் மணிக்கட்டுக்கு அருகில் ஊசியின் ஊடாக மருந்து ஏற்றினர். அந்த மருந்தை ஏற்றியதன் பின்னர் என் கை உணர்விழந்தது போன்று இருந்தது. எனினும், கடும் வருத்தம் ஏற்பட்டது. அவ்வருத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

நான், தாதியிடம் 'என்னுடைய கை வருத்தம் அதிகரித்துவிட்டது. எனக்கு செலுத்தப்பட்ட ஊசிமருந்து சரியானதா?' என்று கேட்டேன்.

அச்சந்தர்ப்பத்தில் அதனை அத்தாதி கணக்கில் எடுக்கவில்லை. மறுநாள் வாட்டுக்கு வந்த வைத்தியர், ஏற்றப்பட்ட ஊசிமருந்து தவறானது என்பதனால் உடனடியாக என்னை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பணித்தார். 

அங்கு மாற்றப்பட்டதன் பின்னர், அங்கிருந்த வைத்தியர் என்னிடம் தெரிவித்தார். இரைப்பைக்கு செலுத்தவேண்டிய ஊசி மருந்து, நரம்புக்கு ஏற்றப்பட்டுவிட்டதாகவும் அதனால், அந்த மருந்தின் தாக்கத்தினால் என்னுடைய விரல்கள் கருகிவிட்டன என்றார். அதனையடுத்து கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியன்று என்னுடைய இரு விரல்கள் வெட்டி அகற்றப்பட்டன. 

நான் இது தொடர்பில் நீர்கொழும்பு மாவட்ட வைத்திய அதிகாரியிடம் முறையிட்டேன்.  நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிபாளரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். எனக்கு ஏற்பட்ட இந்த அநியாயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய வாழ்க்கை பெரும் பிரச்சினையாகிவிட்டது என்றார்.

இது தொடர்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவிக்கையில், 

நான் கடமையேற்று ஒரு மாதமே ஆகின்றது. எனக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் இதுவரை  கிடைக்கவில்லை. எனினும், நோயாளிக்கு அசாதாரணம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை நடத்துவேன் என்றார்.

Post a Comment

0 Comments