Subscribe Us

header ads

இந்த கற்பிட்டி மண்ணிற்கு கண்ணிருந்தால் என்று கற்பனை செய்தேன்.

எத்தனையாயிரம் வருடங்களாக!

எத்தனையெத்தனை தலைமுறைகளை இம்மண் கண்டிருக்கும்? 

எம் நாட்டின் முதல் குடியேறி விஜயனை கூட நடமாட வைத்த மண்ணல்லவா இது!

அவ்வளவு தூரம் ஏன்? 

எமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் கூட எத்தனை இறுமாப்புடன் இங்கு 'எமது மண்' என்று இருப்பு கொண்டிருந்தர்?

அத்தனை பேரையும் இம்மண் கண்டு உண்மையில் உள்ளுக்குள் சிரித்தே இருக்கும்!

இன்றெங்கே அவர்கள் அத்தனை பேரும்? 

நாம் நிற்க இன்று, நம்மை சுமந்து நிற்கிறது!

நாளை இன்னும் நூறு வருடங்கள் கழியட்டும்! 

எம்மில் யாரொருவரையாவது இம்மண்ணால் காணத்தான் முடியுமா? 

அன்று எம் பேரக் குழந்தைகளின் தலைமுறைகளை அல்லவா சுமந்து நிற்க தயாராகி நிற்கும்!

அவர்களுக்கிடையில் உருவாக இருக்கும் எத்தனை குழப்பங்களை சந்திக்க இம்மண் இன்னமும் காத்து நிற்கிறது!

சற்று ஆழமாகவே சிந்திக்கிறேன்,  ஒரு வெளிச்சம் தெரிகிறது. 

ஆம், உலக அழிவு வரை இம்மண் அனைத்தையும் பார்த்தவாறு அமைதியாகவே இருக்கப் போகிறது. இதனை வாழ வைக்க, இந்த கற்பிட்டி மண்ணை வாழ வைக்க நாம் புறப்பட வேண்டிய தேவையொன்றுமில்லை. 

இந்த மண்ணின் மேல் வாழும் மனிதர்களை நோக்கியே நம் கவனம் அனைத்தும் குவிபட வேண்டும்.

இந்த உண்மை இன்றைய எமது இளைஞர்களுக்கு புரிந்து விட்டதோ தெரியவில்லை.

செல்பிக்களால் எமது முகநூல் பக்கங்கள் நிறைந்து வழிகின்றன.

அதனை சூழ்ந்து ரசிப்போர் தொகையையும் அதிகமாகவே காண்கிறேன்.

"மண்ணை எடுத்து என்ன பயன்? தன்னை எடுப்போம்" 

என்ற எண்ணம் எமக்குள் ஏற்பட்டது ஒருபடி முன்னேற்றம்தான். 

செல்பிக்களுக்கு அதிக Like என்னிடமிருந்து கிடைப்பதில்லை என்ற கோபம் இனியும் வேண்டாம் நண்பர்களுக்கு!!! தாமதிக்க விரும்பவில்லை.

முகநூல் செல்பிக்களை தொடர்ந்து ரசித்து வருவதால் இங்கு அனைவருக்கும் மொத்தமாக சேர்த்தே கூறுகிறேன்.

"கற்பிட்டி பிரதேச இளைஞர்கள் அனைவரும் மிக அழகானவர்களாகவே உள்ளனர். என் வாழ்த்துக்களையும் அனைவரும் சேர்த்துக் கொள்ளுங்கள்."

நல்லது, அது அவ்வாறு இருக்கட்டும் "எமது கவனம் மனிதர்களை நோக்கி குவிய வேண்டும்"  என நான் கூற வந்ததானது,

செல்பிக்கள் சுட்டி நிற்கும் அவர்களது உருவங்களை நோக்கி குவிய வேண்டும் என்ற கருத்திலல்ல. அவ்வுருவங்களை உள்ளுக்குள் இருந்து இயக்கும் அவர்களது அறிவை நோக்கி எம்மனைவரது கவனமும் குவிய வேண்டும் என்பதையே! 

வீண் வேலை!!! 

இதற்கான தேவை ஏன் எமக்கு? இதனால் என்ன பலன் எமக்கு? 

என்றென்னும் உள்ளங்களும் நம்மில் நிறையவே உண்டு.

எமது குடும்பத்தவர்களதும மனைவி மக்களதும்  அறிவு, நன்னடத்தை, பண்பாடுகளானது 'எந்தளவு இன்பமான வாழ்வை எமக்கு இம்மண்ணில் ஏற்படுத்தி தரும்' என்று நாம் உணர்ந்து வைத்துள்ளோமோ,  உண்மையில் 'சூழ உள்ளவர்களதும், மூகத்தவர்களதும் அறிவு நன்னடத்தை பண்பாடுகளானது அதை விடவும் அதிகமாகவே எமக்கு இன்பமான வாழ்வை இங்கு பெற்றுத்தரும்'  என்பதை ஏனோ உணர நாம் மறுக்கிறோம்.

'எமது சந்ததிகளுக்கு கொடுக்க நாம் சேர்க்கும் பணத்தை விட பெறுமதியானது அவர்களை இயக்க காத்திருக்கும் சமூகத்தை அழகாக்கி கொடுப்பதாகும்'
என்பதையும் ஏனோ உணர நாம் மறுக்கிறோம்.

மரணத்திற்கு பின்னுள்ள எம் பயணத்திற்கும் இங்கு செய்திகள் பலவுண்டு.

சிந்தித்து செயற்படுவோம்.

இறைவனுக்கே புகழனைத்தும்.

முஹம்மத் சனீர்,
கற்பிட்டி.

Post a Comment

0 Comments