Subscribe Us

header ads

தூக்கத்தில் ஒரு கனவு...மன்னாரில் உருவாகிய குமாசா முஸ்லிம் கிராமம்

வெளியேற்றப்பட்டு இன்றுடன் 25 வது ஆண்டில் இருந்து கொண்டு மக்களுக்கு ஒரு புதிய மாதரிக் கிராத்தை திறந்து வைப்பது என்பது கூட அல்லாஹ் தந்த பெரும் பாக்கியமாகக் கருத வேண்டும். இந்த மாதரிக் கிராமம் உருவாகியது கூட கனவு  நனவாகிய  கதையம்ச வரலாற்றுக் கொண்டதாகும். இவ்வாறு உயர் உள்ளம் படைத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள் எனபதை  நாம் இந்த கதையின் ஊடாக தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.  இந்த கதையை மீள் குடியேற்றப்பட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டியதொரு கடமை எங்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 ஆம் ஆண்டு நிறை தின நிகழ்வில் குவைட் நாட்டு பைத்துஸ் ஸகாத் அரச நிறுவனத்தின் அனுசரணையுடன் பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் 30-10-2015 வெள்ளிக்கிழமை  வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் குமாசா வீடமைப்புத் திட்ட மாதரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி இந்த மாதரிக் கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார் அவர் தொடர்ந்து பேசுகையில்,

குவைட் நாட்டைச் சேர்ந்த பைத்துல் ஸகாத் என்ற நிறுவனம் 1968 ஆம் ஆண்டு தொடக்கம் எங்களோடு நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டிருக்கின்ற அரச நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஊடாக இலங்கையிலுள்ள பல பாகங்களிலும் பணியாற்றக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கு தந்துள்ளான். 

2013 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலே  அந்த பைத்துல் ஸகாத் நிறுவனத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதாவது குவைட் நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரி. அவர் பெயர் குமாசா. அவருடைய தாயார் இறந்து விட்டார். அவர் பெரிய சொத்துக் காரர். அவருடைய சொந்துக்கள் பிள்ளைகளுக்கு பங்கு வைக்கப்பட்டு விட்டன. ஆனால் குமாசா என்று சொல்லக் கூடிய அவருடைய மகள் இரவிலே தூக்கத்தில் ஒரு கனவு காணுகின்றாள். என்ன கனவு காணுகின்றாள். அவருடைய தாயார் கனவிலே வந்து மகளே சுமார் எழுபதாயிரம் தீனார் வேலைத் திட்டத்தை முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்திலே நிர்மாணக்கப்பதற்கு உதவி புரிய வேண்டும் என்று அவருடைய தாயார் கனவில் வந்து கூறுகின்றார். மறுநாள் அந்தப் பெண்மணி காலையில் பைத்துல் ஸகாத் நிறுவனத்திற்கு ஓடி வருகிறாள். அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து  அவருடைய ஆசையைச் சொல்கின்றாள். என்னுடைய தாயார் இவ்வாறான வேண்;டுகோளை கனவில் கூறியிருக்கிறாள். நூன் அதை நனவாக்க வேண்டும். அதனை உண்மைப்படுத்த வேண்டும். எனவே எனக்கு உதவி செய்யுங்கள் என்று அந்தப் பெண்மணி வைத்துல் ஸகாத் நிறுவனத்திலே வந்து தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்கின்றாள். அந்த வேளையில் தான் பைத்துல் ஸகாத் நிறுவனத்தைச் சேர்ந்த  எம்மோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கக் கூடிய சகோதரர்  என்று சொல்லக் கூடிய  ஒரு அதிகாரி தொடர்பு கொண்டு இப்படியானதொரு வேலைத் திட்டம் உங்களிடம் இருக்கிறதா என எங்களிடம் கேட்கின்றார்.

நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆசையோடு இருந்த நாம்  ஆம் எங்களுக்கு அவ்வாறான திட்டம் இருக்கிறது. அதனை நாங்கள் தயாரித்து அனுப்புகின்றோம் என்று சொல்லிவிட்டு இந்த கிராமத்திலுள்ள மக்களை நாம் அணுகிப் பார்த்தோம். அந்தவேளையிலே இந்த அகத்தி முறிப்பைச் சேர்ந்த சகோதரர்கள் முந்திக் கொண்டு அந்த வேலைத் திட்டம் எங்களுக்குத் தான் தரப்பட வேண்டும் என்று எங்களிடத்திலே மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள்.

பொருத்தமான இடம் என தீர்மானம் செய்து உடனடியாக அந்த திட்டத்தை நாங்கள் தயார் படுத்தினோம். இப்பிரதேசத்தின் தேவைக்கு ஏற்றவகையில் அங்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். அடுத்த கனம் அந்த திட்டம் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  கனவு நனவாகியது கதை இதுதான். இவ்வாறு உள்ளம் படைத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள் எனப்தை  நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான்  இந்த கதையை சொல்ல வேண்டி இருக்கிறது. நாம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டிய தொரு கடமை எங்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது.  இந்த வேலைத் திட்டத்தை மேற்கொள்ள உதவி வழங்கியவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

பள்ளிவாசல்களைப் பொறுத்தவரையில் இந்த ஊரில் இருக்கக் கூடிய மக்கள் அனைவருக்கும் பொதுவான இடம். மத்ராசாவைப் பொறுத்தவரையில் அதுவும் அவ்வாறுதான். வீடுகளைப் பொறுத்தவரையிலும் 20 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இங்கு 19 வீடுகள் நிர்மாணிப்பதற்கு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அதில் ஒன்றை மேலதிகமாக செய்து இருக்கின்றோம்.  அந்த வீடு இந்தப் பள்ளிவாசலில் யார் யாரேல்லாம் இமாமாக கடமையாற்றுகின்றார்களோ அவர்கள் குடும்பத்தோடு இருப்பதற்காக கட்டப்பட்ட வீடு ஆகும். ஏனைய 19 வீடுகளும் இந்த மீள் குடியேற்றக் கிராமத்தில் வீடில்லாமல் வாழக் கூடிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். 

-இக்பால் அலி-

Post a Comment

0 Comments