Subscribe Us

header ads

வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!

டனடியாக ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவை, இலவச மருத்துவ சேவைக்கு அணுகவும், கல்வி உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும், குழந்தையைக் காணவில்லை... இப்படி தினம்தினம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பரவிக் கொண்டிருக்கும் எத்தனையோ தகவல்களை நம்மில் பலரும் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.


பெரும்பாலும், அது உண்மையா... பொய்யா... அல்லது அந்தத் தகவல் முற்றுப்பெற்றுவிட்டதா என எதையும் உறுதிசெய்யாமல் ஷேர் செய்பவர்கள்தான் அதிகமானோர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.

அதன் விளைவு... பலருக்கும் தேவையில்லாத சங்கடங்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் பரப்பப்படும் தகவல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்... உண்மையான, அவசியம் ஷேர் செய்யவேண்டிய தகவல்களைக்கூட வெறுப்பின் காரணமாக புறக்கணிப்பதும், அழிப்பதும் நடக்கிறது. 


இப்படித்தான், ஒரு மாதத்துக்கு முன்பு கண்ணில்பட்ட அதே தகவல், இன்று (நவம்பர் 13, 2015) காலையிலும் வந்து விழுந்தது. ' 11 வயதான குழந்தையைக் காணவில்லை’ என்றபடி குழந்தையின் பள்ளி அடையாள அட்டை மற்றும் தொடர்பு எண்களோடு, வாய்ஸ் தகவலும் வாட்ஸ்அப்பில் வந்தது. இது சரியான தகவல்தானா? எனக் கேட்டறிய அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்



''குழந்தை ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிடைச்சுட்டாளுங்க. பக்கத்துல இருக்கறவங்கதான் அப்ப வாட்ஸ்அப்புல போட்டாங்க. அன்னிக்கு சாயந்திரமே, ஒரு பெரியவர் வழியில பார்த்து விசாரிச்சு, குழந்தையை வீட்டுல கொண்டு வந்துவிட்டுட்டாரு. நீங்க போன் பண்ணி கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா, இப்படித்தான் தினமும் விடாம போன் வந்துட்டே இருக்கு. இன்னும் எத்தனை வருஷத்துக்கு வருமோ? தயவு செஞ்சு வாட்ஸ்அப்புல சொல்லி அதை டெலிட் பண்ண முடியுங்களா?'' என்று பரிதாபமாகக் கேட்டார் எதிர்முனையில் போனை எடுத்தவர். 



ஆனால், இந்த விஷயம் தெரியாமல்... இன்னும் எத்தனை பேர், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதை ஷேர் செய்வார்களோ? இது ஒரு சாம்பிள்தான்... இதுபோல ஏகப்பட்ட தகவல்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன.

இந்த நிலை இனியும் தொடரவேண்டுமா? இதில் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்த நொடியிலிருந்து, நமக்கு வரும் எந்தத் தகவலாக இருந்தாலும், நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொண்டே ஷேர் செய்வேன் என்று உறுதிமொழி ஏற்பதுதான். இப்படிச் செய்தால், நிச்சயம் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதோடு, உண்மையான பல நல்ல விஷயங்கள் சரிவர மக்களைச் சென்றடையும். 


என்ன செய்வோமா?!




Post a Comment

0 Comments