Subscribe Us

header ads

நல்லாட்சியில் மாமனிதர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் மர்மம் துலக்கப்படுமா..? மசூர் மௌலானா

இலங்கை முஸ்லிம் அரசியலில் வரலாற்றில் தடம் பதித்து, முஸ்லிம்களும் அரசியல் முகவரி பெற வேண்டுமென அயராது  உழைத்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அன்னாரின் மரணத்தின் மர்மம் இன்னும் துலங்கவில்லை. 

தலைவர் அஷ்ரப்  மரணித்து  15 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் அவருடைய அகால மரணம் பற்றிய மர்மம் துலக்கப்படவில்லையே என மக்கள் இன்றும் ஏக்கம் தெரிவிக்கின்றனர்.

அன்னார் விபத்தில் மரணித்தாரா? அல்லது திட்டமிடப்பட்ட சதி முயற்சியின் காரணமாக மரணமடையச் செய்யப்பட்டாரா? என்று அன்னாரை நேசித்த மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்களால் இதுவரைத் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் கவலை வெளியிடுட்டு வருகின்றனர்.

மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கான பொறுப்புதாரிகளை நல்லாட்சி அரசாவது கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். இன்றும் தாம் ஆழமாக நேசிக்கும் பெரும் தலைவரை படுகொலை செய்யத் துணிந்த கொடூர மனம் படைத்த சூத்திரதாரிகளை எந்தவொரு அரசும் தண்டிக்கவில்லையே என முஸ்லிம்கள் துயரமடைந்திருக்கின்றனர்.

தலைவர் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள் இன்னும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அவைகளை இவ்வரசு பகிரங்கப்படுத்த வேண்டும். இதற்காக நீதியானதும் நேர்மையானதுமான தனியானதொரு விசாரணைக் குழு அமைக்கப்படல் வேண்டும். 

நல்லாட்சியில் சம பங்காளர்களாக இருக்கும் ஐ.தே.கட்சியும் அதற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் காங்கிரசும் இதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்மையில் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான மர்மங்கள் ஓரளவுக்கு வெளிச்சத்திற்கு வந்து மீண்டும் இவ்விசாரணையின் வேகம் மேலிடத்து மறைகரங்களால் தணிக்கப்பட்டது. 

மேலும், அளுத்கம-தர்ஹா நகர் அசாம்பவிதங்கள்,வசீம் தாஜுதீன் படுகொலை மூடி மறைக்கப்படுவது போல நல்லாட்சியில் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கான நீதியான விசாரணையும் மறைக்கப்படக் கூடாது என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். யாரினதும் அழுத்தங்களின்றி சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்.

நல்லாட்சியில் அதிகபட்ச நம்பிக்கை கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு, நல்லாட்சி அரசாங்கம் பூரண நீதியை வழங்க வேண்டும். முஸ்லிம்கள் நேசிக்கும் ஒரு உன்னத தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மர்ம மரணத்திற்கான நீதியான விசாரணைகளை ஆரம்பித்து,குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுப்பது நல்லாட்சி அரசின் தார்மீக பொறுப்பாகும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.



ஊடகப்பிரிவு

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்

Post a Comment

0 Comments