1971 செப்டம்பர் 03 எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்த நாள். நியமனம் கிடைத்தவுடன் பாடசாலை எது? என்று பார்க்கிறேன். ஆம், அது கல்பிட்டி அல் அக்ஸா மஹா வித்தியாலயம். புத்தளத்தில் அனுபவமுள்ள பல ஆசிரியர்களிடம் விசாரிக்கின்றேன். கிடைத்த பதில்கள் யாவும் “சிறந்த பாடசாலை” என்பது தான்.
மகிழ்ச்சியோடு கல்பிட்டி செல்கின்றேன். “அல்ஹம்து லில்லாஹ்” அதிபர், மர்ஹும் ஏ.எம்.ஐ. நெய்னா மரைக்கார் (புத்தளம்), உட்பட அனைத்து ஆசிரியர்களும் அன்போடு வரவழைத்த அந்த நிகழ்வு இன்றும் என் நினைவில் நீங்காமலேயே நிற்கின்றது.
அல் - அக்ஸா வரலாற்றில் மர்ஹ{ம் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் (காலி) அதிபராக இருந்த காலத்தைப் பொற்காலம் என பழையவர் பலரும் வர்ணித்தனர்.
அப்போதும் (1971) எனது பார்வையில் அல் - அக்ஸா ம.வி. நல்லதொரு பாடசாலையாகவே காட்சியளித்தது. அன்றைய மாணவர்களும் நல்ல ஒழுக்க முள்ளவர்களாவே இருந்தனர்.
அல் - அக்ஸாவின் விடுதியிலே (ஹொஸ்டல்) புத்தளம் மாணவர்கள் பலர் தங்கியிருந்து கற்று வந்தனர்.
சித்திர ஆசிரியர் நியமனம் என்பதால் சித்திரம் கற்பிக்க நல்லதொரு வாய்ப்பு எனக்கு அங்கே கிடைத்தது. அது இன்றும் எனது பெயரை கல்பிட்டியில் தக்க வைத்திருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.
அக்கால கட்டத்தில் அங்கு ஆங்கில ஆசானாக பணிபுரிந்த மர்ஹ{ம் என்.எம். ஹலீல் அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார். பாடசாலை விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய சேவையை இன்றும் யாராலும் மறக்க முடியாது.
அப்போதைய அதிபர் ஏ.எம்.ஐ. நெய்னா மரைக்கார் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும், ஆசிரியர் என்.எம்.ஹலீல் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் பாடசாலையின் சின்னத்தை புதிதாக அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அச்சின்னமே இன்றும் நடைமுறையில் இருக்கிறது என்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
1974ல் ஆசிரியர் பயிற்சிக்காக கலாசாலை சென்றுவிட்டேன். பின்பு இப்பாடசாலையில் கடமையாற்றக் கிடைக்கவில்லை. ஆனாலும் பின்னைய காலங்களில் பற்பல முன்னேற்றங்களுடன் பாடசாலை நடைபெறுவதைக் கேள்வியுற்று மனம் மகிழ்கின்றேன். பலவிதமான சிக்கல்கள் தோன்றிய போதும் மனம் தளராமல் இப்பாடசாலையை பல அதிபர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். அவர்களையும் இங்கு பாராட்டுதல் பொறுத்தமாகும்.
இன்று அல் - அக்ஸா தேசிய பாடசாலையாக பரிணமித்துள்ளதையிட்டு பெருமிதம் அடைகின்றேன். அத்தோடு இப்பாடசாலை தனது 70 ஆவது ஆண்டிலே தடம் பதித்துள்ள வரலாறு போற்றத்தக்கதாகும்.
எத்தடைகள் வரினும் அத்தனையையும் தாண்டி தனது கல்விப் பாதையை அமைத்துச் செல்ல அதிபர், ஆசிரியர், பெற்றோர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் உதவி புரிய வேணிடும் எனப் பிரார்த்திப்பதோடு , எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


0 Comments