Subscribe Us

header ads

பேரினவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது

இன, மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் நாட்டின் எந்த மூலையில் இடம்பெற்றாலும் அதற்கு அனுமதி அளிப்பது என்பது நல்லிணக்க சூழலுக்கு பாதகம் விளைவிப்பதாகவே அமையும்.

 கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறான இனவாத, மதவாத செயற்பாடுகளினால் எமது நாடு பெரும் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து வந்துள்ளது என்பது வரலாறாக உள்ளது.

கொழும்பு நகரில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் தேர்த்திருவிழாவை இடைநிறுத்தும் வகையிலான செயற்பாடு தற்போது இடம்பெற்றுள்ளமை பெரும் கவலையளிக்கும் விடயமாக மாறியிருக்கின்றது.

கடந்த 5ம் திகதி மத்திய கொழும்பின் பாபர் வீதி என்ற மகாவித்தியாலய மாவத்தையில் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதனால் முரண்பாடை தவிர்க்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் தேர்த்திருவிழாவினை ரத்துச் செய்துள்ளனர்.

எமது நாடானது சகல இன, மத மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையிலான அரசியலமைப்பை கொண்டிருக்கின்றது. சகல மதத்தவர்களும் தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு உரித்துடையவர்கள்.
இந்த நிலையில் தேர்த்திருவிழாவினை நடத்த வேண்டாம் என்று ஒரு தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளமையானது மத வாதத்தை தூண்டும் செயற்பாடாக அமைந்து விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டமை தற்போது குறித்த பகுதியின் பிரச்சினையாக இல்லாது தேசிய பிரச்சினையாக மாறியிருக்கிறது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

மகாவித்தியாலய மாவத்தையில் அமைந்துள்ள இந்துக்கோவிலின் தேர்த்திருவிழா இடைநிறுத்தம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை இன்று ஒரு தேசிய பிரச்சினையாக உருமாறிவருகின்றது. இத்தகைய நிலைமை இன்று இந்த நாட்டுக்கு உகந்ததல்ல. இந்த சூழலில் இது தொடர்பில் நாம் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படக்கூடாது.

எனவே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பை நான் தற்போது கொழும்பு மாநகர முஸ்லிம் சமூகத் தலைவர்களிடம் விட்டுள்ளேன் என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார். தற்போது நான் எடுக்கக்கூடிய பொறுப்புள்ள நிலைப்பாடு இதுதான் என நான் நம்புகின்றேன்.

இது தொடர்பில் இஸ்லாமிய மதத் தலைவர்களிடம் கலந்து பேசி முடிவெடுத்து இந்தத் தேர்த் திருவிழாவினை அனைவரும் இணைந்து நடத்தி நல்லிணக்க சகவாழ்வு சூழலை உருவாக்கித் தரும்படி அமைச்சர் பைசல் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் நல்லிணக்க இயக்கத் தலைவர் இராஜா முஹமத் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல மதங்கள், பல இனங்கள் வாழும் இந்த நாட்டில் பொலிஸ் பாதுகாப்புடன் மத விழாக்களை நடத்த முடியாது. இன்று இந்தத் தோட்டத்தில் உருவாகியுள்ள இந்த சூழல் நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கும் சக வாழ்விற்கும் ஊறு விளைவிக்கின்றது.

கடந்த காலங்களில் இந்நாட்டில் கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை இச்சம்பவம் ஞாபகப்படுத்துகின்றது.

மீண்டும் நாம் இருண்ட யுகத்திற்குள் போக விரும்புகின்றோமா? அல்லது முன்னோக்கி நகரப்போகின்றோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையிலேயே கொழும்பு நகரில் அமைந்துள்ள இந்து ஆலயமொன்றில் தேர்த் திருவிழாவை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவு நிலவி வருகின்ற இன்றைய காலகட்டத்தில் அந்த உறவினை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவில் சந்தேக நிலை ஏற்பட்டிருந்தது. பல்வேறு தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புக்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இரு தரப்பு உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தனர். சிறுபான்மையின மக்களின் ஒற்றுமையின் அவசியம் இந்த வேளையில் வலியுறுத்தப்பட்டது.

தம்புள்ளை பள்ளிவாசல் தொடக்கம் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரையில் திட்டமிட்ட வகையில் பேரினவாத சக்திகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது.

பேருவளை, தர்கா நகர், அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.

இவ்வாறான தாக்குதல்களை தமிழ், அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்திருந்தன. முஸ்லிம் மக்கள் மீது சிங்கள இனவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது தமிழ் மக்களும் ஒன்றிணைந்து அதனை எதிர்த்தனர்.

பொதுபலசேனா என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டன. ஹலால் பிரச்சினை முதல் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை இல்லாதொழிக்கும் வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இதற்கு எதிராகவும் தமிழ் மக்கள் குரல் கொடுத்தனர். இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்கியுள்ள இந்த நிலையில் இவ்வாறான சிறிய சம்பவங்கள் அந்த ஒற்றுமைக்கு எந்தவகையிலும் பாதகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

தற்போது கொழும்பு நகரில் இந்து ஆலயத்தில் தேர்த்திருவிழா இடைநிறுத்தப்பட்டதையடுத்து பொலிஸ்மா அதிபருக்கு பொதுபலசேனா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்றே பொதுபலசேனா அமைப்பின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கின்றது.

தமிழ் மக்களது கடமைகளை தடுத்து அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதானது அடிப்படை மனித உரிமை மீறல் விடயமாகும். இத்தகைய நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக்கூடாது. கொழும்பில் சில குழுக்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் சட்டத்தை தமது கையில் எடுக்க முனைகின்றன. இதனையே பாபர் வீதி ஆலய சம்பவமும் உணர்த்துகின்றது.

இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழாவை நடத்தவிடாது ஒரு சில மதவாதக் குழுக்கள் தடுத்து வருகின்றன. இத்தகைய செயற்பாடு இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு அறிவுரை கூறியுள்ளது.

இத்தகைய அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி சகல இன மக்களும் தமது மத அனுஷ்டானங்களையும் கடமைகளையும் சுதந்திரமாகவும் அச்சமின்றி மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என்று கோரி தாம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பொதுபலசேனாவின் ஒருங்கிணைப்பாளர் திலிந்த தெரிவித்திருக்கின்றார்.

தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள சிறிய விவகாரத்தை பூதாகரமாக்கும் வகையில் பொதுபல சேனாவின் செயற்பாடு அமைந்திருக்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமேயாகும்.

பேரினவாத சக்திகள் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு எந்தளவு முனைப்பாக உள்ளன என்பதற்கு பொதுபலசேனாவின் கருத்து சான்றாக உள்ளது.

எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் எந்தவகையிலும் முரண்படாது ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். ஆலய பிரச்சினைக்கும் தீர்வு காண இருசமூக தலைவர்களும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Post a Comment

0 Comments