இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு மூத்த சகோதரியும் தன்னுடைய ஆண் சகோதரனின் கல்விக்கான வழிகாட்டலை வழங்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளனர். அந்தப் பிள்ளைகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து வழிகாட்ட வேண்டிய பொறுப்பு இவர்களைச் சார்ந்துள்ளது. இல்லாவிட்டால் ஆண் பரம்பரை உலகில் அருகி வரும் ஓர் உயிரினமாக மாறும் அபாயம் உள்ளதென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்தப்படும் தகவல் ஊடகத்துறைப் பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
ஆண்களின் படிக்கின்றவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. இது எமது நாட்டுக்கு இன்று ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடாகும். இன்று அரசாங்க சேவையில் 65 வீதமானவர்கள் பெண்களே காணப்படுகின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்கள் 51 வீதம் காணப்படுகின்றனர். தொழில்வாய்ப்பில் ஆண்கள் சமவாய்ப்பு வேண்டி சண்டை பிடிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெண்கள் அரசியல் துறையிலேயே தங்களுக்கு சம உரிமை கேட்டு சண்டை பிடிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இன்று பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தில் 225 பேருக்கு 13 பேர்களே பெண்களாகவுள்ளனர். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண் வேட்பாளர்களை 25 வீதமாக போடுவது சட்டமாக வரப்போகிறது.
ஆண்கள் அரச தொழில் துறையில் 35 வீதமானோரேயுள்ளனர். கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு கலைத்துறையில் தெரிவானவர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள். 20 வீதமானர்களே ஆண் மாணவர்கள். இலங்கையில் தொழில் ரீதியாக அதியுயர் பரீட்சையாக கருதப்படும் இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் கடந்த வருடம் 229 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இது இலங்கையின் வரலாற்றில் கூடுதலான தொகை. இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்து தெரிவானோரில் 162 பேர் பெண்களாக காணப்பட்டனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஆண் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றுவதன் மூலமே இந்நிலை மாறும் எனவும் அவர் மேலும் கூறினார்.
மூன்று மாத தகவல் ஊடகத்துறைப் பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வு சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்லம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். முஜீப் உட்பட நிலைத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ள நேர்முகப் பரீட்சையில் தெரிவான 50 மாணவ, மாணவிகள் தமது பதிவுகளை இன்றைய தினம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments