பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டும் திட்டமிட்ட ஒரு இன அழிப்பும், அடக்குமுறையும் கடந்த காலங்களில் இடம்பெற்றன. அதில் இருந்து மக்களையும் நாட்டையும் விடுவித்து அதனை ஜனநாயகத்தின் பாதையில் திருப்பியுள்ளோம். கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க பல வழிமுறைகள் உள்ளன. தீர்வும் மிக அருகாமையில் தான் உள்ளது. அவற்றை வெற்றிகொள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைந்து ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் கடந்த கால வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பிலும் வடக்கில் ஆயுத கலாசாரத்தை பரப்பிய சந்தர்ப்பங்களிளும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இவை கடந்தகால கசப்பான சம்பவங்களாக உள்ளன. குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானோர் வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகளை கடந்துவிட்டன. விடுதலைபுலிகளின் ஆக்கிரமிப்பும் அடக்குமுறைகளும் பலமடங்கு அதிகரித்து இருந்த காலகட்டம் அது. தமிழ் முஸ்லிம் மக்கள் இரண்டற கலந்து வாழ்ந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளினால் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையே இரண்டு சமூகத்தின் மத்தியிலும் பாரிய பிளவை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த ஆட்சியில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை இன மக்கள் பாதிக்கப்பட்டனர். பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டு வந்தனர். அதேபோல் திட்டமிட ஒரு இன அழிப்பும், அடக்குமுறையும் கடந்த காலங்களை நடைபெற்றன. பெரும்பான்மை ஆதிக்கத்தை தூண்டிவிடும் வகையிலும் அவர்களது கரங்களை உயர்த்தும் வகையிலும் இவர்களது செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன.
அதேபோல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த கடந்த காலங்களில் ஆட்சிசெய்த தலைமைகள் மறந்துவிட்டன. ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப நல்ல சந்தர்பம் கிடைத்தது. ஆனால் மூவின மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையுடன் கூடிய பயணத்தை முன்னெடுக்க முன்னைய அரசாங்கம் விரும்பவில்லை. ஜனநாயகம், நல்லிணக்கம் எவையும் சரியான முறையில் பாதுகாக்கப்படவில்லை. அதன் தாக்கம் மிகவும் மோசமானதாக அமைந்தது.
ஆனால் இப்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. கடந்த தேர்தலின் பின்னர் நாட்டில் நல்ல மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன. ஜனநாயகத்தை மதிக்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இரண்டு தலைவர்கள் இப்போது நாட்டில் தலைமையேற்று செயற்படுகின்றனர். அதேபோல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்த பயணத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதை கடந்த தேர்தலின் போது மூவின மக்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இப்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வடக்கு,கிழக்கு,தெற்கு இணைந்த ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பி ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் உருவாக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மூவின மக்களும் தமது மத நடவடிக்கைகளையும், கலாசாரத்தையும் சுதந்திரமாக பின்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் ஒருவரது கலாசார மத விடயங்களில் ஏனைய இனத்தவர் கலந்துகொள்ள வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து நாட்டில் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ளன. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட வேண்டும். அவர்களை பலப்படுத்தி நாட்டில் ஒற்றுமையை கட்டியெழுப்ப எமது தேசிய அரசாங்கம் முன்னிற்கும்.
எனவே பழைய விடயங்களை மறந்து, கசப்பான சம்பவங்களை கடந்து ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க பல வழிமுறைகள் உள்ளன. தீர்வும் மிக அருகாமையில் தான் உள்ளது. அவற்றை வெற்றிகொள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். பல்லின சமூகம் அமைதியாக வாழும் நாட்டை கட்டியெழுப்பி புதிய இலங்கையை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.


0 Comments