உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை (15.10.2015) முன்னிட்டு இலங்கைக் கவிஞர் கனிவுமதியால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பான ‘அக்கினிக்குஞ்சு’ நூல் இன்று 10. 10. 2015 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை சங்கம் ஒழுங்கையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறவுள்ள வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் ‘மல்லியப்பு சந்தி’ திலகராஜ் கலந்து கொள்ளவுள்ளார். நூலின் முதற்பிரதியை வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் வெளியிட இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுகொள்வார்.
இந்நிகழ்வில் வாழ்த்துரையினை பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நூலின் சிறப்பு குறித்தான நயவுரையினை மு.மயூரன், ஆகியோர் வழங்கவுள்ளார்கள். மேலும் விழாவினை அணிசெய்ய மலை நாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப், வீரகேசரி பத்திரிகையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன், திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை (ஆசிரியர் – கலைக்கேசரி) வீ. தனபாலசிங்கம் (ஆசிரியர் – சமகாலம்) பூபாலசிங்கம் புத்தக சாலை அதிபர் ஆர்.பி.ஸ்ரீதரசிங் வர்ணம், F.M. பணிப்பாளர் எஸ்.நவநீதன் ஆகியோரோடு கலை இலக்கியவாதிகள் கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அப்துல் கலாம் பற்றி எழுதப்பட்டுள்ள இக்கவிதை நூலில் அடங்கியுள்ள கவிதைகள் இதுவரை எந்த ஒரு அச்சு ஊடகத்திலோ இணையத்தளத்திலோ வெளிவந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை நிர்ஷன் இராமனுஜம் நடத்திச் செல்வார்.
இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


0 Comments