எமது நாட்டின் தலைமை பொறுப்புக்களை அமெரிக்காவிடம் கையளித்துள்ள தற்போதைய அரசாங்கம் எமது நாட்டின் தேசிய அபிமானத்தை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்துவிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட யுத்தக்குற்ற அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ஆதரவு அணியினர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று விஹார மாதேவி பூங்காவில் இடம் பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டில் உருவாகும் பட்சத்தில் நாடு சர்வதேச சக்திகளிடத்தில் மண்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என நாம் கடந்த தேர்தல் காலத்திலிருந்து சுட்டிக்காட்டியிருந்தோம். இது ஐக்கிய தேசிய கட்சி பரம்பரையாக முன்னெடுத்து வந்த செயற்பாடு என்பதை நாம் அறிந்திருந்த காரணத்தினாலேயே நாம் அது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம்.
1977 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தான் செயற்பட்டு வந்திருக்கின்றது. நாம் இது தொடர்பில் மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தல் விடுத்திருந்தபோதிலும் சர்வதேச சக்திகள் தமது இலக்கை அடைவதை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விட்டதென்பது வருத்தமளிக்கும் காரணியாகவே உள்ளது.
நான் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் அரசாங்க தரப்பில் ஒருவரிடம் வினவியபோது அவர் சர்வதேசத்தின் நட்பு நாட்டுக்கு தேவைப்படுகின்றமையினால் சர்வதேசத்திற்கு கீழ்ப்படிந்து செயற்படுவதாக குறிப்பிட்டார். வேடிக்கையாக இருக்கின்றது. சர்வதேச சக்திகளிடத்தில் எம்மை காட்டிக்கொடுத்துவிட்ட பின்னர் அதனை எவ்வாறு நட்பு தேவை நிமித்தம் செய்கின்றோம் என குறிப்பிட முடியும்.
இதனால் ஐ.நா.எமது நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிட வழிசமைத்துக்கொடுத்துள்ளது தற்போதைய அரசாங்கம்.இந்த நாட்டின் தலைமைப்பொறுப்புக்கள் அனைத்தும் தற்போது அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்போவ தாக அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றது. ஆனால் குறித்த வரிச்சலுகை இல்லாத கட்டத்திலும் எமது நாடு உலக பொருளாதார சந்தையில் உன்னதமான நிலையில் இருந்ததை மறுக்க எவராலும் முடியாது.
எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்திடம் நாம் கேட்பது ஒரு விடயம் தான். எமது நாட்டின் தேசிய அபிமானத்தை அமெரிக்க டொலருக்கு விலைபேசுவதை நிறுத்துங்கள்.எமது நாட்டின் தலையெழுத்தை டொலர்கள் தீர்மானிக்கவேண்டிய நிலையை தோற்றுவிக்க வேண்டாம் என்பதுதான் என்றார்.
0 Comments