தனது மனைவி இறந்து புதைக்கப்பட்ட தினம் தொடக்கம் மூன்று வருடங்களாகத் தொடர்ந்து அந்தக் கல்லறைக்குப் பக்கத்திலேயே காலம் கழித்த கணவரொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கல்லறைக்குப் பக்கத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று கம்பஹாவில் நடந்துள்ளது.
மனதை உருக்கும் இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த எட்டம்பொல ஆராச்சிகே புஞ்சிசிங்கோ எனும் இந்த நபரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் மரணமடைந்த பின் அவரது உடல் கம்பஹாவிலுள்ள மயானமொன்றில் அடக்கம் செய்யப்பட்டது.
அன்று மயானத்துக்கு வந்த புஞ்சிசிங்கோ அதற்குப் பின் மனைவியின் கல்லறைக்குப் பக்கத்திலேயே வாசம்செய்ய ஆரம்பித்தார்.
குடும்பத்தினர் அவ்வப்போது மயானத்துக்குக் கொண்டுசென்று கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டு கடந்த மூன்று வருடங்களாக மயானத்தை விட்டு அகலாமல் அங்கே தங்கியிருந்தார்.
அந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அவரது உயிர் அந்த மயானத்திலேயே பிரிந்தது.
இறக்கும் போது அவருக்கு 92 வயது எனவும், கம்பஹா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கம்பஹா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பத்ர டி எஸ். காலிங்கவின் தலைமையில் இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 Comments