ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ – ரிலியா தம்பதியின் மகன் ஜாக்சன் டெய்லர். இவன் பிறந்து ஒரு வயது 4 மாதம் ஆகிறது.
இவன் கடந்த மாதம் (செப்டம்பர்) 15–ந்தேதி தனது தாயார் ரிலியா மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தான். அப்போது இவர்களது கார் மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஜாக்சன் டெய்லரின் தலை கழுத்துக்குள்ளேயே துண்டானது.
பொதுவாக இது போன்று விபத்துக்குள்ளானவர்கள் உயிர் பிழைப்பது இல்லை. அந்த இடத்திலேயே இறந்து விடுவார்கள். ஆனால் குழந்தை ஜாக்சன் உயிருடன் இருந்தான். எனவே, அவனை விமானம் மூலம் பிஸ்டேன் நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவனது தலையை மீண்டும் கழுத்துடன் இணைக்க முடிவு செய்தனர். அதை தொடர்ந்து 6 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. அப்போது வயர்கள் மற்றும் விலா எலும்பு துண்டுகளை வைத்து முதுகெலும்புடன் தலையை இணைத்தனர்.
தற்போது குழந்தை ஜாக்சன் டெய்லர் நலமுடன் இருக்கிறான். தற்போது அவனது தலை உடலுடன் உறுதியாக இருக்கும் வகையில் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. அதை 8 வாரங்கள் கழித்து அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
விபத்தின் போது குழந்தையின் உயிர் காக்கும் நரம்புகள் பாதிப்பு அடையவில்லை. அதனால் தான் இந்த அரிய ஆபரேஷன் சாத்தியமானது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவன் வழக்கமான தனது வாழ்க்கையை நீண்ட காலம் நலமுடன் வாழ முடியும் என்றும் தெரிவித்தனர்.
இந்த அரிய ஆபரேஷன் மூலம் தங்களது மகன் உயிர் பிழைத்திருப்பது அதிசயிக்க தக்க சம்பவம் என அவனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


0 Comments