Subscribe Us

header ads

ஆணின் கைப்பாவையாகும் பெண்கள்

பெண்ணானவள் பொத்திப் பொத்திப் பத்திரமாக, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறாள். ஆண் போராட்ட குணத்துடன், தன்னிச்சையாக வளர்க்கப்படுகிறான். பெண் என்பவள் மற்றவர் பேச்சைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டியவள் என்றும், எதிர்த்துப் பேசுகிற உரிமை ஆணுக்கு மட்டுமே உண்டு என்றும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

சினிமாக்களில் கூட ஹீரோயினுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஹீரோ வந்து காப்பாற்றுவார். அதுவே ஹீரோவுக்கு பிரச்னை என்றால் ஹீரோயினின் உதவி தேவைப்படுவதில்லை. இது யதார்த்த வாழ்க்கையிலும் இருக்கிறது. பிரச்னை வந்தால் அழுவது பெண்ணின் இலக்கணமாகவும், எதிர்த்து நிற்பது ஆணின் அடையாளமாகவும் சொல்லப்பட்டு வளர்க்கிறார்கள். மீறுகிற பெண்ணைத் தூற்றும் இந்தச் சமுதாயம்.திருமணமாகாத பிரபல பெண்ணிடம், உங்கள் வாழ்க்கை நிறைவு பெற்று விட்டதாக நினைக்கிறீர்களா என விடாமல் விரட்டும் கேள்வியின் பின்னணியில் உள்ளது என்ன? திருமணம் என்கிற பெயரில் ஆணுடன் இணைகிற போதுதான் அவளது வாழ்க்கை பூரணமடைகிறதாம். 

அதுவே திருமணமாகாத எந்த ஆணும் இப்படி யொரு கேள்வியை எதிர்கொள்வதில்லை.உடுத்துவது, சமைப்பது, சாப்பிடுவது என எல்லாவற்றுக்கும் கணவரின் அனுமதியும், அங்கீகாரமும் கேட்டே பழக்கப்படுகிறாள் பெண். உடலியல் ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆணின் கோபத்துக்கும் வன்முறை குணத்துக்கும் காரணம் அவனது உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான். அதனால்தான் ஆண்கள் அழுவதில்லை. தனது பலவீனங்களைப் பகிரங்கமாகவோ, மனைவியிடம் மனம் விட்டோ பேசுவதில்லை. தாம்பத்திய உறவு கொள்ள கணவனுக்கு மனதளவிலான தயாரிப்புகள் ஏதும் அவசியப்படுவதில்லை. 

நினைத்த நேரத்தில் அதை  சாதித்துக் கொள்ளலாம். பெண்ணுக்கோ அவள் உடலில் உள்ள நியூரான்களும் ஹார்மோன்களும் இதற்கு நேர்மாறாக சிந்திக்க வைப்பவை. அவளுக்கான எல்லைகளைத் தீர்மானிப்பது வரை அவற்றின் ஆதிக்கம் இருக்கிறது. தன் காதலர் அல்லது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், அவர் தன்னை விட்டு விலகி விடுவார் என்கிற பாதுகாப்பின்மை பல பெண்களுக்கும் இருக்கிறது.ஒரு உறவில் இப்படிப்பட்ட விஷயங்களை சந்திக்காமல் தப்பிக்கிற பெண்களும், இரண்டாவது காதல் அல்லது திருமணத்தில் கட்டாயம் மாட்டிக் கொள்கிறார்கள்.

பேரழகும், பெரிய அந்தஸ்தும், பெயரும், புகழும் உள்ள பெண்களும், காதலில் சுலபமாகக் கரைந்து விடுகிறார்கள். அதிலும் தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்த ஒருவரைத் திருமணம் செய்கிற போது, இந்தக் கரைதலும் காணாமல் போதலும் மிக இயல்பாகவே நடந்து விடுகிறது. பெண்கள், திருமணத்துக்குப்பிறகும், திருமணத்துக்கு முன்பான சந்தோஷத்தைத் தொலைக்காமல் வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை உயிர்ப்போடு இருக்கும். 

Post a Comment

0 Comments