(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்களைக்கொன்று அட்டகாசம் செய்துவந்த காட்டு யானையை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை காலை பிடித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக இப்பிரதேசத்தில் தங்கியிருந்து, அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் குறித்த காட்டு யானை பிடிக்கப்பட்டது.
மேற்படி யானை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிராம வாசிகளை கொன்றதுடன், அச்சுறுத்தி வந்ததுள்ளது.
கிழக்கு மாகாண வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்தியர் நிகால் புஷ்பகுமார தலைமையிலான விஷேட வைத்தியர் குழு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் 18 அதிகாரிகள், குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த யானை 40 வயதுடையது எனவும் 4 தொன் எடையுடையது எனவும்,வைத்தியர் நிகால் தெரிவித்தார்.
மேற்குறித்த போரதீவுப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையில் நிரந்தரமான தீர்வை எட்டுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையினாலும், கடந்த திங்கட்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தினாலும் குறித்த போராட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பத்து நாட்களுக்குள் பிரச்சினைக்குரிய யானைகளை வேறு இடத்திற்கு அகற்றுவது என்றும், அதுவரையில் பாதுகாப்புப் படையினரையும் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தினருடன் சேவையில் ஈடுபடுத்துவது என்றும், அதே நேரத்தில் யானைகள் நிற்கும் பற்றைக் காடுகளை துப்புரவு செய்வது என்றும் முடிவுகளை அறிவித்திருந்ததன்படி காடுகள் துப்புரவு செய்யும் வேலைகள் நடைபெற்று விஷேட வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டக்களப்புக்கு வருகை தந்து யானைகளை பிடித்துச் செல்வதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்த காட்டு யானை பிடிபட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments