தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் ரூபா 2500 வினால் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தொழிற்சங்க ஒன்றியம் சம்பள நிர்ணய ஆணைக்குழு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமென்றும் அதனோடு வேறு பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
சமூக நீதிக்கான தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போதே இக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியுடனான தொழிற்சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகளின் போது, ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான சில அமைச்சர்களின் பங்களிப்புடன் தேசிய மட்டத்தில் தொழிற்சங்க ஆலேசனைச் சபையொன்றை நியமிப்பதற்கான அனுமதியை இதன்போது ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகளால் கீழ் கண்ட கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதாவது ரூபா 10000 கொடுப்பனவை அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்தல். தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்குள் அரசு மற்றும் தனியார் துறையினரின் சம அளவிலான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்.
டெலிகொம் மற்றும் ஏனைய அலை அரச நிறுவனங்களின் (மேன்பவர்) மனிதவள ஊழியர்களை நிரந்தரமாக்குதல்.தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 2500 ஆக உயர்த்துதல். இதற்காக பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
அரசு சேவைகள் ஆணைக்குழுவை தொடர்ந்தும் சுயாதீன ஆணைக்குழுவாக ஸ்தாபித்தல். சம்பள நிர்ணய சபையை மறுசீரமைத்தல். "அக்ரஹாரா" காப்புறுதியிலுள்ள குறைபாடுகளை நீக்கல், சம்பள உயர்வு வீதத்தை அதிகரித்தல். போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தல்.அனைத்து அரச ஊழியர்களுக்கும் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொடுத்தல். உட்பட தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப் பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் சமன் ரத்னப்பிரிய, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உட்பட சங்கப் பிரதிநிதிகள் பலர் இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.


0 Comments