8 மாத குழந்தையை காப்பாற்றவா அல்லது கணவரின் வேலையை காப்பாற்றவா என்ற நிலையில் சீனப் பெண் தவித்து வருகிறார்.
சீனாவில், யுன்னான் மாகாணத்தை சேர்ந்த சென் என்ற 41 வயதுடைய பெண்ணின் கணவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. தற்போது, 2வது முறையாக 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார் சென்.
ஆனால், அரசு பணியில் இருப்பவர்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் கடுமையான அபராத தொகையுடன், வேலையையும் இழக்க நேரிடும் என்பது அந்நாட்டு அரசின் சட்டம். எனவே தனது கணவரின் அரசு வேலையை காப்பாற்ற தனது வயிற்றில் இருக்கும் 8 மாத குழந்தையை கருக்கலைப்பு செய்ய சென் திட்டமிட்டார்.
இந்த தகவல் சீன இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை பார்த்த மக்கள், 'குழந்தையை கருக்கலைப்பு செய்ய வேண்டாம்’ என சென்னுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, அரசு அதிகாரிகளுக்கு டெலிபோனில் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 'ஆன்லைன் டிராவல் சர்வீஸ்’ என்ற நிறுவனம், குழந்தையை கருக்கலைப்பு செய்ய வேண்டாம் என்றும், உங்கள் கணவரின் வேலை பறிபோனால் எங்கள் நிறுவனத்தில் பணி நியமனம் செய்கிறோம் எனவும் சென்னுக்கு ஆறுதல் கூறியுள்ளது.
0 Comments