ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மெக்கா அருகே உள்ள மினா நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல லட்சம் மக்கள் ஒரே இடத்தில் திரண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிப்பட்டும் இறந்தனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 இந்தியர்கள் உள்பட 717 ஆக உயர்ந்துள்ளது. 863 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி சவுதி விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், பலியானவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் அந்நாட்டின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், மினா நகருக்கு வருகை தந்ததை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக, யாத்ரீகர்கள் சென்ற பாதை திடீரென மாற்றப்பட்டதாகவும், இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் லெபனான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி இளவரசர் ஒரு பெரிய பரிவாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் வந்ததாகவும், இந்த செய்தியை அந்நாட்டு அரசு மறைப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றசாட்டை சவுதி அரசு மறுத்துள்ளது.

0 Comments