Subscribe Us

header ads

ஹஜ் யாத்திரையின்போது மக்காவில் நிகழ்ந்த கோர விபத்துகள் சில தொகுப்புக்கள்



இறைவன் ஒருவனே என்று கலிமா (உறுதிமொழி) கூறி இஸ்லாமை தங்களது மார்க்கமாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது முஹம்மது நபி(ஸல்) பிறந்த மெக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு சென்று ஹஜ் புனித யாத்திரையை நிறைவுசெய்ய வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு இறைவனால் விதிக்கப்பட்ட ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாக உள்ளது. 

இறைவனை தொழுவதற்காக ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களால் உருவாக்கப்பட்டு, இப்ராஹிம் நபி(அலை) அவர்களால் புணர்நிர்மாணம் செய்யப்பட்ட கஃபா எனப்படும் புனித வளாகத்தை ஏழு முறை சுற்றி வருவதன்மூலம் ஒருவரின் முற்பாவங்கள் அனைத்தும் மன்னித்து, நீக்கப்படுகின்றன என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். 

இதனால், ஆண்டுதோறும் உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்களது இறுதி கடமையை நிறைவேற்ற இங்கு ஒன்று கூடுகின்றனர். இவ்வகையில், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு சென்ற இரண்டு இந்தியர்கள் உள்பட 107 பேர் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதிக்குள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் ஹஜ் பயணத்தின்போது நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களையும், அந்த துக்ககரமான சம்பவங்களில் பலியான மக்களின் எண்ணிக்கையையும் அறிந்து கொள்வோம்.

1990: மெக்கா நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக ஹஜ் யாத்ரீகர்கள் சென்றபோது கூட்டநெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 1,426 பேர் உயிரிழந்தனர்.

1994: மினா நகரில் உள்ள சாத்தான் தூணின்மீது ஏழு கற்களை வீசியெறிந்து மனதில் உள்ள தீய ஆசைகளை போக்கிக்கொள்ளும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 270 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

1997: மினா நகரில் ஹஜ் யாத்ரீகர்கள் தங்கியிருந்த ஒரு கூடாரத்தில் ஏற்பட்ட தீ, அதிவேகமாக வீசிய காற்றால் இதர கூடாரங்களுக்கும் பரவிய கோர விபத்தில் 340 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

1998: மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது மீண்டும் தள்ளுமுள்ளு - 180 பேர் உயிரிழப்பு.

2001: மினா நகரில் ஹஜ் கடமையை நிறைவு செய்யும் இறுதி நாளில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 35 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 

2004: ஹஜ் கடமையை நிறைவு செய்யும் இறுதி நாளில் மினா நகரில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 244 யாத்ரீகர்கள் உயிரிழப்பு.

2006: மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது மீண்டு தள்ளுமுள்ளு - 360 பேர் உயிரிழப்பு. அதே ஆண்டில் மெக்கா நகரின் பெரிய மசூதி அருகே உள்ள எட்டுமாடி ஓய்வு இல்ல கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் 73 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

2015: மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதிக்குள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி இரண்டு இந்தியர்கள் உள்பட 107 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த யாத்ரீகர்கள் அனைவரும் என்ன நன்மையை எதிர்பார்த்து மக்கா நகரில் குவிந்தனரோ.., அதற்கு பன்மடங்கு நற்கூலியை அவர்களுக்கு வழங்கி, ஆன்ம இளைப்பாறலையும் அருளுமாறு இறைவனை இறைஞ்சுவோம்!

Post a Comment

0 Comments