அயர்லாந்து நாட்டில் உள்ள பொறியியல் மாணவர்களுடன், சில பள்ளி மாணவர்களும் சேர்ந்து உலக சாதனை முயற்சிக்காக நடைப்பாலம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைகளின் கற்பனைத் திறனையும், படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவரும் விதமாக தாமே உருவாக்க நினைக்கும் ரெயில், பாலங்களை உருவாக்குவதற்கான தகடுகள் போன்ற அமைப்புகளை மெக்கானோ என்கிற பிரிட்டன் நாட்டில் உள்ள பிரபல விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி தனித்தனியே வழங்கி வருகிறது.
சிறு வயதிலேயே இந்த தகடுகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை வைத்து விளையாடும் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களின் மீது அதீத ஈடுபாடு ஏற்படுவதாக கருதப்படுகிறது.
இந்த துறைகளில், இளம் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களும், இங்குள்ள பெல்ஃபாஸ்ட் நகர பள்ளி மாணவர்களும் சேர்ந்து மெக்கானோவின் மூலப்பொருட்களை வைத்தே நூறடி நீள நடைப்பாலத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் பாலம் மெக்கானோவின் பதினோறாயிரம் தகடுகளைக் கொண்டு, ஓராண்டு உழைப்பில் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பொம்மைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த நிஜப்பாலம், பொறியியலில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் பள்ளியின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள இந்தப்பாலம், விரைவில் கின்னஸ் சாதனையும் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல், கணித பாடங்களை வாழ்க்கையிலும் பயன்படுத்துவது நல்ல விஷயம்தானே!



0 Comments