எகிப்தில் உள்ள ஒரு மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதை (பாங்கை) காலத்திற்கேற்ப மாற்றி கூறிய மசூதி இமாமுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இஸ்லாமியர்களை ஐவேளை தொழுகைக்கு அழைக்கும் நோக்கத்தில் உலகில் உள்ள பல நாடுகளில் ஒலிபெருக்கிகள் மூலம் ஐவேளையும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. அல்லாஹு அக்பர் அல்லா என தொடங்கும் இந்த அழைப்பொலியில் (பாங்கோசை) "சுபுஹு" என்றழைக்கபடும் விடியற்காலை வேளை தொழுகைக்கு அழைக்கும்போது மட்டும் "அஸ்ஸலாத்து கைருல் மினன்னவ்கி” (தூக்கத்தை விடத் தொழுகை மேலானது) என்ற வாசகம் வரும்.
எகிப்தின் நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள பெஹைரா மாகாணத்தின் கப்ர் அல் தவார் என்ற ஊரில் உள்ள ஒரு மசூதியில் இவ்வாறு தொழுகைக்கு அழைக்கும் இமாமாக வேலைபார்க்கும் முகமது அல் மொகாசி என்பவர், சமீபத்தில் விடியற்காலை நேரத்து "சுபுஹு" தொழுகைக்கு அழைக்கும் பாங்கில் அந்த வாசகத்தை சற்று மாற்றி "பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை விட தொழுகை மேலானது" என்று அழைப்பு விடுத்தார்.
இதைதொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது அந்த மசூதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடியும்வரை அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் மொகாசி கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் எகிப்து அதிபர் தலையிட்டு தன்னை பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


0 Comments