உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கு உதவ விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் தான் ஃப்ரீரைஸ்.காம் (www.freerice.com). அவர்களுக்கு உணவளிக்க நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அதற்கு பதில், கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தால் போதும்.
ஜான் ப்ரீன் என்பவரால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளம், 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டக் குழுவினரிடம் வழங்கப்பட்டது. ஃப்ரீரைஸ், ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்களின் ஆதரவுடன், வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள மக்களுக்கு உணவளித்து வருகிறது.
இந்த இணையதளத்தில் பொது அறிவு, மொழி அறிவு, கணக்கு, வேதியியல், புவியியல் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாம் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் நம் அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் முதல், பட்டம் பெற்ற ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் ஏற்றார் போல் கேள்விகள் பல்வேறு நிலைகளாக வகுத்து கேட்கப்படுகின்றன. நம்முடைய அறிவுக்கு ஏற்ற நிலையை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நாம் பதிலளித்த பின், கீழே விளம்பரம் செய்யப்படும் நிறுவனம், நம் சார்பாக பத்து நெல்மணிகளை வழங்குகிறது.
இதுவரை கம்போடியா, உகாண்டா, நேபாளம், மியான்மர், ஹைத்தி, பூடான் உள்ளிட்ட பல நாடுகளில், ஃப்ரீரைஸ் அகதிகளுக்கும், குழந்தைகளுக்கும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உணவளித்துள்ளது.
குழந்தைகள் கணினியில் விளையாடும் சண்டை மற்றும் ரேஸ் விளையாட்டுகளுக்கு பதில், இந்த விளையாட்டை விளையாடினால் அறிவு கூடுவதுடன், ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உணவளித்து, ஓர் உதவியையும் செய்யலாம். மேலும், நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் இணையதளத்துக்கு (www.wfp.org) சென்று தங்களால் முடிந்த அளவு நன்கொடையினை வழங்கலாம்.
எங்கோ உள்ள முகம் தெரியாத மனிதர்களின் உணவுக்காக நாம் விளையாடும் போது அடையும் மகிழ்ச்சியை, விளையாடிப்பார்த்தால் தான் உணரமுடியும்.


0 Comments