Subscribe Us

header ads

மூலிகைகளை தேடுங்கள்



னைத்து நாடுகளிலும் அலோபதி மருந்துகள்தான் பெரும்பாலான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பண்டைய காலம் தொட்டு அந்தந்த நாட்டில் உள்ள மூலிகைகளை, இலை, கொடி, வேர்களை வைத்து மேற்கொள்ளப்படும் மருத்துவத்திலும் பலன்களை காண்கிறார்கள். இன்றும் பல நோய்களுக்கு மூலிகை மருத்துவத்தால்தான் நல்ல குணம் கிடைக்கிறது.

எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலை நோய்க்கு எவ்வளவோ அலோபதி மருந்துகள் இருந்தாலும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் கீழ்வாநெல்லி கீரைகள்தான் இன்றும் உடனடி குணத்தைக் கொடுக்கிறது. இந்த கீரையை வைத்துத்தான் பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளையெல்லாம் தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபடவேண்டும்.

ஐதராபாத்தில் உள்ள தைருதுல் மாரிபில் உஸ்மானியா என்ற மையம் 1888–ம் ஆண்டு நிஜாமால் அமைக்கப்பட்டது. இந்த மையம் இதுவரை 2 லட்சம் பக்கங்கள் கொண்ட அரபு மருத்துவ குறிப்புகளைத் தொகுத்துள்ளது. தற்போது 925–ம் ஆண்டில் அபு பக்கிர் அல் ராசி என்ற அரபு மருத்துவ மருத்துவர் பல்வேறு நோய்களுக்கு குணம் அளித்த மருத்துவ முறைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணிகளையும், மின்னணு நூல்கள் அதாவது இ–நூல்களாக மாற்றும் முயற்சிகளையும் தொடங்க இருக்கிறது. இந்த பணிகளுக்காக மத்திய அரசாங்கமும் நிதி ஒதுக்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுபோல எண்ணற்ற மூலிகைகளை வைத்து சித்த மருத்துவம் போன்ற தமிழ்முறைகள் நோய்தீர்க்கும் முறைகளாக இருந்து இருக்கிறது. காலப்போக்கில் இவையெல்லாம் காணாமல் போய்விட்டது. இந்தியாவில் அபூர்வ குணம் கொண்ட ஆனால் அழிந்துவரும் மூலிகைகளாக 70 மூலிகைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 14 மூலிகைகள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள மூலிகைகளாகும். பொதுவாக ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகளுக்காக தேவைப்படும் மூலிகைகளெல்லாம் கேரளா, தமிழ்நாடு, அருணாச்சலபிரதேசம், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மூலிகை செடிகள் மூலமாகத்தான் கிடைக்கிறது. பண்டைய கால ஆயுர்வேத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள மொத்தம் உள்ள 8 ஆயிரம் மூலிகை செடிகளில் பெரும்பாலான மூலிகை செடிகள் மேற்கு தொடர்ச்சி மலையிலும், இமய மலையிலும்தான் கிடைக்கிறது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாடுதான் காட்டு வெங்காயம், மர மஞ்சள், ஆடுதின்னாப்பாளை போன்ற ஏராளமான அபூர்வ மூலிகைகளுக்கு தாய் பூமியாக இருக்கிறது. இந்த நிலையில் மூலிகை செடிகளை பாதுகாத்து, பராமரித்து, மேலும் வளர்க்க மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவாக அதாவது 2 கோடியே 15 லட்ச ரூபாயைத்தான் மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 16 மாநிலங்களுக்கு தமிழ் நாட்டை விட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருந்து அதிகமான கருத்துருக்கள் அதாவது திட்டங்கள் அனுப்பப்படவில்லை, 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்கம் நிதி அளித்த திட்டங்களெல்லாம் இன்னும் நிறைவுபெறவில்லை என்ற காரணத்தைச் சொல்கிறார்கள். தமிழக அரசு இன்னும் தீவிர கவனம் செலுத்தி அழிந்துவரும் மூலிகை செடிகளை பாதுகாக்கவும், இன்னும் ஏராளமான மூலிகை செடிகளை விவசாயிகளும், மூலிகை வாரியமும் பயிரிடவும், ஆந்திராவில் தீவிரமாக செய்வதுபோல பழைய ஓலை சுவடிகள், குறிப்புகளில் உள்ள மருத்துவ முறைகளையெல்லாம் மருத்துவ நூல்களாகவும், இ–நூலாகவும் தொகுக்கவும், மத்திய அரசாங்கத்திடம் கூடுதலாக நிதி பெறவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments