யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் இடம் பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அனுசரணையாளர்களும் சாட்சியம் அளிக்க வேண்டிய தேவை ஏற்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாட்டுச் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகாக்கள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டளை தளபதிகள் ஆகியோரில் எவரேனும் குற்றம் செய்துள்ளமை நிருபனமாகும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது தெரிவுக்கு அமைய யுத்தம் என்பது தவறானது. அதன் பிரகாரம் யுத்தக் குற்றங்களில் ஈடுபடும் படி எவராவது கட்டளை பிறப்பித்திருந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். எமது அரசாங்கம் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க தரப்பிலிருந்து தற்போது கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகளை நடத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் விசேட நீதிமன்றத்தின் கீழ் விசாரணை இடம் பெற வேண்டும் என்று மனித உரிமை ஆணைக்குழு அறிவித்த போது அதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் இணக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச தரத்திற்கு அமைவான விதத்திலேயே உள்நாட்டு பொறிமுறை அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படும்.ஆனால் ஒரு தனி நாடாக சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்துவது தொடர்பில் எமக்கும் உடன்பாடு இல்லை என்றார்.


0 Comments