புத்தளம் கொழும்பு (A3) பிரதான நெடுஞ்சாலையில் புத்தளம் நகருக்கு அண்மித்து தில்லையடியில் காணப்படும் புகையிரத கடவை மக்களுக்கு ஆபத்தை விளைவித்து வருவதை அனுபவ ரீதியாக உணர்தேன்.
நேற்றைய முன்தினம் பாலாவியிலிருந்து புத்தளம் நோக்கி மோட்டர் சைக்கிளில் செல்லுகின்ற சமயம் புகையிரத கடவையை நெருங்கிய நேரம் சுமார் முப்பது அடி தூரத்தில் கடவை திடீரென்று மூடப்பட்டதால் செய்வதறியாது திடீர் பிரேக் போட்டதில் எனது சைக்கிள்அங்கும் இங்கும் தள்ளாடி இறுதியில் கடவையோடு முட்டியும் மோதாமலும் நின்றது. நல்ல வேலை நான் வேகமாக செல்லாத காரணத்தினால் கடவை உடையாமல் தப்பித்து கொண்டேன்.
இந்நிகழ்வு எனக்கு மாத்திரமல்ல எனக்கு தெரிந்த பலருக்கு இவ்வாறு நடந்திருக்கின்றது தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் பயணிகள் மற்றும் சீமெந்து தொழிற்சாலை ரயில்கள் அடிக்கடி இப்பாதையில் செல்வதால் இப்புகையிரத கடவை சரியாக இயங்குகின்றதா என்பதில் அதிகாரிகள் விழிப்புடன் செயற்படல் வேண்டும் .
புகையிரத கடவையை இயக்குகின்றவர் வாகனங்கள் அருகில் வருகின்றதா என்பதை பார்த்தே கடவையை மூடவேண்டும் அனால் இங்கு அவ்வாறு நடப்பதில்லை மேலும் ஒலி ,ஒளி சமிஞ்சைகள் ஒலிரப்பட்டு சில வினாடிகளின் பின்னரே கடவை மூடப்படல் வேண்டும் அப்போதுதான் வருகின்ற சாரதிகள் எச்சரிக்கை அடைவார்கள் ஆனால் இங்கு அவ்வாறு இல்லை என்பதை கடமையில் நின்ற ஊழியரே ஒப்புக்கொண்டார்.
எவ்வித முன் எச்சரிக்கையுமின்றி திடீரென கடவை மூடப்படுவது ஏன் என்ற காரணத்தை கேட்டபோது இவை ஏனைய கடவைகளை போல் அல்ல இது தானியங்கியாக செயற்படுகின்றது. மின்சாரமும் இல்லை, சூரியஒளி மின் கலத்தை பாவித்து இயக்குகின்றோம். ஒரு சுவிச்சை போட்டவுடன் ஒலி,ஒளி சமிஞ்சை மற்றும் கடவை மூடல் எல்லாமே ஒரே நேரத்தில் நடைபெறும் எனகுறிப்பிட்டார். அத்தோடு ஒருவழி ரயில் பாதையாக இருப்பினும் இரண்டு கடவைகளும் நீண்ட தூரத்தில் சுமார் ஐம்பது மீற்றர் இடைவெளியில் அமைந்துள்ளதாலும் புத்தளத்திலிருந்து வருகின்ற வாகனங்களை கவனிக்க முடியாதவாறு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளதாலும் (போஸ்டர் ஒட்டும் கட்டிடம் ) தனி ஒருவரினால் மாத்திரம் எல்லாவற்றையும் கவனித்து செயற்படுவது கடினமான ஒன்றாகும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன என கூறினார். இலங்கையில் எங்கும் இல்லாத ஆபத்தை விளைவிக்ககூடிய இம்முறை புத்தளத்துக்கு மட்டும் நடைமுறைபடுத்தப்படுவது உண்மைதானா என்பதை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கண்டறிய வேண்டும்.
உண்மையில் இக்கடவை தானியங்கியாக எவ்வித முன்னறிவித்தலுமின்றி இக்கடவை திடீரென்று மூடப்படுமேயானால் வாகன சாரதிகள் இக்கடவையுடன் மோதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் இதனாலோ என்னவோ மாதத்தில் இருமுறையாவது இக்கடவை உடைந்து காணப்படுகின்றது.
இப்புகையிரத கடவையுடன் மோதுவதனால் கடவையை புதுப்பித்தலுக்கான செலவுடன் மேலதிகமாக இருபத்தைந்தாயிரம் ரூபா நட்டஈடாக புகையிரத திணைக்களத்துக்கு அபராதம் கட்டுவதுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார் என பொலிசாரினால் மோதியவர் மீது வழக்கும் தொடரப்படும் .
இங்கு சமாந்தரமாக குறிக்கிடும் இவ்நெடுஞ்சாலை புகையிரத பாதையுடன் இணைகின்ற காபட் போடப்பட்ட பகுதி குன்றும் குழியுமாக உடைந்து நீண்ட காலமாக யாரும் கவனிக்காமல் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளால் செல்ல முடியாத அளவுக்கு பழுதைடைந்து உள்ளது இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை கவனித்து செப்பனிட வேண்டும்.
இங்கு புகையிரத திணைக்களத்தின் பாரபட்சமான நடவடிக்கையினால் பாதிக்கப்பட போவது அப்பாவி சாரதிகளே இது தொடர்பாக புதிய புத்தளத்து பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண போக்குவரத்து அமைச்சரும் உடனடிக்கவனமேடுத்து விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாதையை பயன் படுத்தும் ஆயிரக்கணக்கான சாரதிகள் சார்பாக சம்மந்த்தப்பட்ட அனைவரையும் கேட்டுகொள்கின்றேன்.....-
சமூக நலன் விரும்பி
எஸ்.எம்.மணாப்தீன்.






0 Comments