சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதிக்க வேண்டும் என இரகசிய காவல்துறையினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தன.
இதன்படியே, தமது தீர்ப்பை வெளியிட்டதாக மேலதிக நீதிமன்ற நீதிவான் தெரிவித்தார்.
ரக்பி வீரர் வசிம் தாஜூடீனின் சந்தேகத்திற்கிடமான முறையில் தமது மோட்டார் வாகனத்தினுள் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் நாராஹேன்பிட்ட ஷாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி மீட்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 27 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, வசிம் தாஜூதீனின் மரணம், கொலையால் சம்பவித்திருக்கலாம் என இரகசிய காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
கூரிய ஆயுதத்தினால் அவரது கழுத்துப் பகுதியில் தாக்கப்பட்டிருந்ததாகவும், மழுங்கிய பிரிதொரு ஆயுதத்தால் அவரது உடல் பகுதியில் தாக்கப்பட்ட தடயங்கள் இருந்ததாகவும் உடற் கூற்று பரிசோதனைகளின் மூலம் தெரியவந்ததாக இரகசிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், வசீமின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட தெஹிவளை மருத்துவமனை வீதியில் உள்ள மையவாடியில் மீண்டும் சோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் வேலைகள் இன்று பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்று முடிந்தன.
மேலும் இதன்போது , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ’விற்கு எதிரான பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றும் தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வசீம் தாஜுதீனின் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது அரசியல் எழுச்சியைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், அவரது ஆட்சியில் விபத்தென முடிவு செய்யப்பட்டிருந்த வசீம் தாஜுதீன் விவகாரம் தற்போது கொலையென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று காலை மருத்துவ பரிசோதனைகளுக்காக மூன்று வருடங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மரணத்துக்கு முன்பாக வசீம் தாஜுதீன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்ற அதேவேளை, குறித்த சம்பவத்தில் மஹிந்த ஆட்சிக் காலத்தின் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின்(PSD) மூவர் தொடர்பு பட்டிருப்பதாகவும் வெளியான தகவல்களையடுத்து தற்போது அப்பிரிவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 Comments
Nee poi sonna engurathalathan ippo marupadi thondi eduthurukkanga
ReplyDelete