Subscribe Us

header ads

போலீசார் செலவில் ஓட்டலில் சாப்பிட்டு, சினிமா பார்க்க ஆசையா? உங்களது வாட்ஸ்அப் இனி கை கொடுக்கும்



இனாமில் கிடைப்பது பினாயிலாக இருந்தாலும் அதன் மணம் மற்ற பினாயில்களைவிட சிலருக்கு சற்று தூக்கலாகவே தெரியும். அதைப்போல் ஓசியில் நல்ல ஓட்டலில் சாப்பாடு கிடைத்தால் அதன் சுவையும் தூக்கலாகவே தோன்றும். கூடவே கட்டணமின்றி சினிமாவும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால்.., அதுவும் போலீசாரின் செலவில்.., 'கேட்கவே வேண்டாம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லாவா?

ஆனால், இந்த கொடுப்பினை எல்லாம் கிடைக்க நீங்கள் டெல்லிவாசியாக இருக்க வேண்டுமே!

ஆம், டெல்லியில் உள்ள போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் - போலீசார் இடையில் உள்ள நட்புறவை பலப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஒரு நல்ல திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின்படி, டெல்லி மாநகர சாலைகளில் சிக்னல்களை மதிக்காமல் கடந்துபோகும் வாகனங்கள், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவோர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைப்பவர்கள், தெளிவில்லாத எழுத்துகளை கொண்ட நம்பர் பிளேட்களுடன் வலம்வரும் வாகனங்கள் உள்ளிட்டவை தொடர்பாக நீங்கள் ‘வாட்ஸ்அப்’ மூலம் இனி புகார் அளிக்கலாம்.

இதற்கென, டெல்லி போலீசாரால் வடிவமைக்கப்பட்டுள்ள 'ஆப்'பில் உங்களது கைபேசி எண்ணை பதிவு செய்துகொண்டு, 87508 71493 என்ற எண்ணுக்கு புகைப்படத்துடன் கூடிய இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நீங்கள் எந்நேரமும் ‘வாட்ஸ்அப்’ மூலம் புகார் தெரிவிக்கலாம். வீடியோக்களாகவும் உங்கள் புகார்களை நீங்கள் அனுப்பி வைக்கலாம். 

இப்படி, நூறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் நபர்களுக்கு நல்ல ஓட்டலில் தரமான உணவு மற்றும் குளுகுளு திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீசான சினிமாக்களை பார்ப்பதற்கான இலவச டிக்கெட்டுகளை அளித்து உங்களை குஷிப்படுத்த டெல்லி போக்குவத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்கள் ரெடி, நீங்க ரெடியா?

Post a Comment

0 Comments