Subscribe Us

header ads

பொலன்னறுவை வரையிலான நெடுஞ்சாலையை முன்னிலைப்படுத்த ஜனாதிபதியிடம் முதலமைச்சர் கோரிக்கை

-CM MEDIA-


மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மையம் நேற்று  மாலை 29.08.2015  மட்டக்களப்பு நீருற்றுப்பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளர் எம்.உதய குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் உரையாற்றும்போது:

இன்று நாட்டில் நெடுஞ்சாலைகள் அமையப்பெற்று இலங்கை அழகுத் தோற்றத்துடன் காட்சி தருவது அனைவருக்கும் சந்தோஷமான விடையமாக இருந்தாலும், கிழக்கில் இன்னும் பாதைகள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை. அதனை சரியான முறையில் அமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனை நல்லாட்சியின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் அடுத்தவாரம் விரிவாகப் பேசவிருக்கிறேன்.

கிழக்கில் முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையினரின் வருகை அதிகரிக்கின்றபோது ஏராளமான தொழிற்துறைகளை உருவாக்கும் தேவையும் அதன் மூலம் பிரயோசனம் அடையும் மக்களின் தொகையும் அதிகரித்துக்கொண்டிருக்கும். இதற்கான இன்றைய முக்கிய தேவைகளில் ஒன்றாக இருப்பது வீதிகள். அதனால் இன்று வீதிகளின் முக்கியம் உணரப்படுகிறது. கிழக்கின் அபிவிருத்தியில் வீதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதனால், இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலை அமைப்பில் கொழும்பில் இருந்து பொலன்னறுவை வரையிலான வீதியினை முதலில் அமைக்கவேண்டும் என்று ஜனாதிபதியினுடனான சந்திப்பில் கூறவிருக்கிறேன்.

பொலனறுவை வரையான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் கொழும்பில் இருந்து இரண்டு மணிநேரத்திற்குள் பொலனறுவை சென்றடையலாம். இதனால் கிழக்கின் பல பாகத்துக்கும் பயணிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே எதிர்வரும் நான்கு வருடத்துக்குள் பாரிய சேவைகள் கிழக்கில் இடம்பெறவிருக்கிறது. அதற்கான எனது பணிகள் சிறப்பாக இடம்பெறும். இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அத்துடன் மட்டக்களப்பில் இருந்து பொத்துவிலுக்கும், அம்பாரைக்கும் புகையிரத சேவையினை வழங்க சகல நடவடிக்கை ஏற்பாடாகியுள்ளது விரைவில் அதற்கான வேலைகள் நடைபெறும் என்றும்  கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் தெரிவித்தார்.

இவ்விழாவில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ்  கொயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி பணிப்பாளர் அஜின்ஹேன், ஆசியமன்றத்தின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி டினேஷ டி சில்வா,  விக்ரம நாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிறின் காசிநாதன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.சலீம்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.சார்ள்ஸ், இவர்களுடன் சுற்றுலாக் கைத்தொழில் சம்மேளணத் தலைவர் ஏ.எம்.ஜவுபர், தொழிலதிபர் சுரேன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments