எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிவடையும் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவின் கையொப்பங்களுடன் கூடிய அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஐ.ம.சு.மு.வின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் சார்பில் சுசில் பிரேம்ஜயந்தவின் கையொப்பத்துடன் நியமிக்கப்பட்டுள்ள முகவர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டதாக கடந்த வௌ்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உதவி தலைவர் தினேஷ் குணவர்த்தன மற்றும் முன்னணியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையாளரை சந்தித்து பேச்சு நடத்தியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வௌ்ளிக்கிழமை மாலை சுசில் பிரேம்ஜயந்த செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உதவி தலைவர் தினேஷ் குணவர்த்தன தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனையடுத்தே நேற்று முன்தினம் சனிக்கிழமை தேர்தல் ஆணையாளருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தினேஷ் குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஆறு பேரும் தேர்தல் ஆணையாளரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் அவரையே தேர்தலில் செயலராக தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஐ.ம. சு. மு. வின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பில் ஐ.ம.சு. மு. வின் உதவி செயலரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தகவல் தருகையில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது. இது தொடர்பில் நான் வௌ்ளிக்கிழமையே மாலையே தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தேன். அது மட்டுமன்றி சனிக்கிழமை நாங்கள் தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடினோம்.
எமது கோரிக்கைக்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பாராளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவின் கையொப்பங்களுடன் கூடிய அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே ஏதாவது சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் எம்மிடம் குறிப்பிட்டார் என்றார்.


0 Comments