இங்கிலாந்தின் பிரபல பி & க்யூ நிறுவனம் தோட்டத்தை செழுமைப்படுத்துவது தொடர்பான வேலைகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழே இயங்கும் பூ வளர்ப்பை முதன்மையாக கொண்ட ஒரு நிறுவனத்தில் புதிதாக மூன்று பேர் பூக்களிடம் பேசவும், பாட்டுப் பாடவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களை பணியில் நியமித்த தோட்டக்கலை நிபுணர் டிம் க்ளாப் இதுபற்றி கூறுகையில் ‘மனிதர்கள் போல செடிகளுக்கும் உயிர் இருக்கிறது. நீங்கள் கவனிக்கவில்லை எனத் தோன்றினால் அது வாடிவிடும். ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஏற்றாற்போல் அவற்றிற்கு குறிப்பிட்ட பாட்டுப் பாடுவதோ, குறிப்பிட்ட விதத்தில் பேசுவதோ மகிழ்ச்சியளித்து அவை நன்கு வளர உதவும்’ என்கிறார்.
இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட பிரிட்டன்காரர்கள் தங்கள் தோட்டத்து செடிகளுடன் பேசுவதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதிலும், லண்டனைச் சேர்ந்த அறுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இந்த விஷயத்தை நம்புவதால் தாங்கள் தினமும் செடிகளிடம் பேசுவதாக தெரிவித்துள்ளனர்.
வட அயர்லாந்தைச் சேர்ந்த மக்களில் நாற்பத்தி இரண்டு சதவிகிதத்தினர் செடிகளிடம் பேசுவதாகவும், நாற்பத்தைந்து சதவிகித மக்கள் பேசுவது பூ மலர உதவுவதாகவும் கூறியுள்ளனர். இதில் 55 வயதுக்கு மேற்பட்டோரில் ஐம்பத்தேழு சதவிகிதத்தினர் தாம் பேசுவதால்தான் செடிகள் வளருவதாக ஆணித்தனமாக நம்புகின்றனர்.
இதனால் எந்த பாடல், எந்த வகைச் செடிக்கு பாடினால் வளரும் என்பது குறித்து மக்கள் தோட்டக்கலை நிபுணர் டிம்மிடம் கேட்டு கற்றுவருகின்றனர்.


0 Comments