Subscribe Us

header ads

'ஈவ்-டீசிங்'கில் கைதான அணில்



பொதுவாக பெண்களுக்கு ஆண்களால்தான் தொல்லைகள் ஏற்படும். கேலி, கிண்டல் செய்வது, கையை பிடித்து இழுப்பது, காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது என்று. ஆனால் ஜெர்மனியில் ஒரு பெண்ணை அணில் ஒன்று படாதபாடு படுத்தியுள்ளது. அந்த அணிலால் வெறுப்படைந்த பெண் போலீசில் புகார் செய்ய, அணில் கைது செய்யப்பட்டிருக்கிறது. இது உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ஜெர்மனியின் வடக்கு ரெயின் வாஸ்பாலியாவில் உள்ளது பாட்ராபை என்ற இடம். இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜெர்மனி போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் கூறிய புகாரைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

'நான் மேற்கு ஜெர்மன் நகரில் உள்ள தெரு வழியாக தினமும் சென்று வருகிறேன். அப்போது என்னை அணில் ஒன்று விரட்டி விரட்டி தொந்தரவு செய்கிறது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து அந்த அணிலிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்' என அந்தப் பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

இதனால் திகைத்து போன போலீஸ் அதிகாரிகள் அந்தப் பெண் குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணை பின்தொடர்ந்த அணிலை பிடிக்க போலீசார் முயன்றனர். மனிதர்கள் என்றால் சுலபமாக பிடித்துவிடலாம். மரத்துக்கு மரம் தாவும் அணிலை எப்படி பிடிப்பது. போலீசாருக்கு அந்த அணிலைப் பிடிக்க 6 மணி நேரம் ஆகியிருக்கிறது. ஒருவழியாக அணிலைப் பிடித்து (கைது) போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதை அறிந்ததும் புகார் கொடுத்தப் பெண், போலீஸ் நிலையம் வந்துள்ளார். அவர் போலீசாரிடம், 'அணில் என்னை காதலிப்பதால் தான், பின் தொடர்ந்து வருகிறது' என்று கூறி போலீசாரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீசாரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'அந்த அணிலை கைது செய்து காவலில் வைத்திருக்கிறோம். மருத்துவ பரிசோதனையில் அணிலுக்கு சோர்வு நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கு உணவாக தேன் வழங்கப்பட்டு வருகிறது' என்று மிகப்பெரும் குற்றவாளியைப் பிடித்தது போல் பேட்டி வேறு கொடுத்துள்ளனர் போலீசார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அணிலுக்கு உணவளித்த போலீஸ் அதிகாரி, அந்த அணிலுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பல லைக்குகளையும் அள்ளியுள்ளார்.

'நான் ஈ' படத்தை போல, அணில் காதலிப்பது உண்மையாக இருக்குமோ?..

Post a Comment

0 Comments