-Irshard Rahumathullah-
ஒட்டமாவடி பிரைந்துரைச்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையினை நடத்தவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பொலீஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கையில் அப்பாவி நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் இந்த பிரதேச மக்கள் அச்சத்தில் இருப்பதால் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கின்ற சக்திகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இந்த தேர்தலில் சகோதரர் வேட்பாளர் அமீர் அலியின் வெற்றிக்காக செயலாற்றி வந்த சகோதரர் அமீன் என்பவர் இந்த துப்பாக்கி சூட்டில் மரணமான செய்தி கேட்டு கவலையும்,அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,மரணமானவரின் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும்,அவரது இறப்பால் வேதனைப்படும் குடும்பத்தினருக்கும்,ஒட்டமாவடி சமூகத்திற்கும் தனது ஆழ்ந்ந கவலையினையும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமை இருக்கின்ற போது,மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களை இலக்கு வைத்து அவர்களை அடக்கி வைக்கும் நிலையினை இந்த சம்பவம் மூலம் காணமுடிகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் மனித உயிரை காவு கொள்ளவது அங்கீகரிக்க முடியாது,உண்மையான முஸ்லிமைப் பொறுத்த வரையில் ஒரு போதும் அவனது கரங்கள் பிற முஸ்லிம்முக்கு இவ்வாறானதொரு துன்பத்தை செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் எவராக .இருந்தாலும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் பொலீஸ் மா அதிபரிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் தொடர்பு கொண்டு பிரதேசத்தின் அமைதி தன்மையினை குழப்பும் சக்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமமாறும் கேட்டுள்ளார்.
0 Comments