அமெரிக்காவில், சின்ன குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, சலூன் கடைக்காரர் ஒருவர் இலவச ‘ஹேர்கட்’ செய்து வருகிறார்.
அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் சலூன் நடத்தி வருபவர் கோர்ட்னி ஹோம்ஸ். புத்தகப் பிரியரான இவர், குழந்தைகளிடையே புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவதற்கு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார். மார்க் எடுப்பதற்கு மட்டுமே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, பொதுவாகவே கற்றலில் இன்பம் கிடைக்க வேண்டும் நினைத்த அவர், முடி வெட்ட வரும் குழந்தைகளுக்கென, எண்ணற்ற புத்தகங்களை தனது சலூனில் அடுக்கி வைத்துள்ளார்.
குழந்தைகளுக்கு இலவசமாக முடிவெட்டும் அவர், அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை எடுத்துவந்து முடிவெட்டும் நேரத்தில் சத்தமாக படிக்கச் சொல்கிறார். அவர்களுக்கு படிக்க கடினமாக இருந்தால் தானே உதவியும் புரிகிறார். இவரது இந்தச் செயல் தற்போது உலகம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
அவரது இந்த முயற்சிக்கு ‘பேக் டு ஸ்கூல் பேஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வார இறுதியில் மட்டுமே முடிவெட்ட செல்வர். சமீபத்தில் அவர் தொடங்கிய இந்தப் பணியில், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் வந்துவிட்டனர். அவர்கள் ஏமார்ந்துவிடாமல் இருக்க வவுச்சர் ஒன்றை வழங்கி மீண்டும் இலவச ‘ஹேர்கட்’ செய்துகொள்ள திரும்ப வரச் சொல்லியிருக்கிறார்.
கோர்ட்னியின் இந்த முயற்சியை பலரும் ஆதரித்து, அந்த சலூனுக்கு வரும் குழந்தைகள் படிக்க நிறைய புத்தகங்களை நன்கொடையாக வழங்கிவருகின்றனர்.
இவரது பணி சிறக்க வாழ்த்துவோம்!
0 Comments