Subscribe Us

header ads

பெண்ணுக்குப் பாதுகாப்பு எங்கே?



பெண் வீட்டிலும் பொது இடங்களிலும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியபடிதான் வாழ வேண்டியிருக்கிறது. தனிமையில் இருக்கும்போது மட்டுமல்ல, மக்கள் நிறைந்த இடங்களிலும் பெண்ணின் மீது பல வன்முறை நிகழ்கிறது. 

உற்று நோக்குவது, கடந்து செல்லும்போது தகாத வார்த்தைகளை முணுமுணுப்பது, பெண்களைப் பேருந்திலும் சாலைகளிலும் உரசிவிட்டுச் செல்வது, பெண்ணின் அங்கங்களை விமர்சிப்பது, இவற்றை அதிகபட்சமாக முகக்குறிப்புகளால் எதிர்க்கும் பெண்ணைப் பார்த்து விநோதமான விலங்கு போலச் சப்தமெழுப்பி உமிழ்வது (இதெல்லாம் ஒரு மூஞ்சி என்ற அர்த்தத்தில்) போன்ற பலவற்றைச் சொல்ல முடியும். இவற்றை எதிர்கொள்ளும் பெண்ணின் கல்வி, பதவி, சிந்தனை, குடும்பப் பின்னணி, மனநிலை இவை எதுவும் மேற்கண்ட கீழ்த்தரமான செயல்பாடுகளைச் செய்யும் ஆணுக்குத் தெரியாது. 

அவனுக்கு அந்தச் சமயத்தில் பெண்ணைச் சீண்டுவதற்குத் தான் ஆண் என்ற அடையாளமும் அவள் பெண் என்ற அடையாளமும் போதுமானதாக இருக்கிறது. ‘ஆண் நுகர்வதற்குப் படைக்கப்பட்ட பெண் நீ’ என்று பெண்ணுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் செயல்கள் இவை. பெண்ணைச் சீண்டுவது ஆணின் தார்மீகப் பிறப்புரிமை என்றே ஆண்களால் நம்பப்படுவது எத்தனை பெரிய அறியாமை. இத்தகைய உணர்வு ரீதியிலான தாக்குதலில் இருந்து உலகில் எந்தப் பெண்ணும் தப்பி இருக்க முடியாது. 

சாலையில் பயணிக்கும்போது சில ஆண்கள் செய்யும் இந்தக் கண்ணியக் குறைவான செயல்கள் பெண்களை உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு ஆளாக்குகின்றன. பாதுகாப்பற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, தன் கண்ணியம் குறித்துச் சமூகம் என்ன நினைக்கும் என்ற அச்சம், தனியே சாலைகளில் நடந்து செல்வதில் ஏற்படும் கூச்சம், பதற்றம் போன்ற பல இயல்புக்கு மாறான மனநிலையைப் பெண்கள் அந்தச் சமயங்களில் அடைகிறார்கள். 

இத்தகைய மனநிலையில் பெண்கள் எந்த நோக்கத்துக்காகத் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் என்பதையே மறந்து விடுகிறார்கள். மீண்டும் வீட்டுக்குள் விரைந்து சென்று ஒளிந்துகொள்வதே அவர்களுக்கு உடனடித் தேவையாக இருக்கிறது. ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யும்போது நிகழும் தெருச் சீண்டல்களைப் பார்க்கும் சக பயணிகள் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது அபூர்வம். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் என்ற கூச்சம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தனது எதிர்ப்புணர்வைக் காட்டத் தடையாக இருக்கிறது. 

இவற்றை மீறி அந்தப் பெண் எதிர்ப்பைக் காட்டினால் தன் மீது எந்தத் தவறும் கிடையாது என்றே ஆண்கள் ஏக பத்தினி விரதர்களைப் போலப் பாவனை செய்யத் தொடங்கி விடுவார்கள். பெண் மீதான மதிப்பீட்டைக் கட்டியெழுப்பவும் அதன் மீது கீறல்கள் போடவும் தெரிந்த இந்தச் சமூகத்துக்கு அடிபணிந்து கை, கால்களைக் குறுக்கிக் கொண்டு பயணிக்கப் பெண் மீண்டும் மீண்டும் ஆயத்தம் ஆகிறாள். 

Post a Comment

0 Comments