பாதாள உலக கோஷ்டிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. நல்லாட்சியின் மீது விருப்பம் கொள்ளாதவர்களின் சதித் திட்டமே புளுமெண்டல் சம்பவமாகும். இது தொடர்பில் பொலிஸார் விரைவில் இரகசியங்களை வெளிப்படுத்துவார்கள் என ஊடகத்துறை அமைச்சரும் காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
எமது கொள்கை என்றைக்கும் மாற்றம் அடையாது. நல்லாட்சியை பலப்படுத்தும் வகையில் தேர்தலை நீதியான முறையில நடத்தி காண்பிப்போம். சுமார் பத்து வருடங்களாக ஜனாதிபதியாக பதவி வகித்து செய்ய முடியாத காரியாங்களை எவ்வாறு குருநாகல் மாவட்டத்தின் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மஹிந்த செய்யப்போகின்றார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
பத்து வருடங்களாக நாட்டை ஆட்சி செய்து மக்களுக்கு எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை. நாட்டின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களினூடாகவும் மோசடிகள் செய்யப்பட்டன. மக்கள் உணரும் படியான எந்தவொரு பணிகளும் செய்யப்படவில்லை.
எனவே பத்து வருடங்களாக தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டார். எனினும் சாதாரண மக்கள் தொடர்பில் நிவாரண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதனூடாகவும் மோசடிகள் செய்யப்பட்டன.
எனவே முன்னாள் ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியின் போதே போற்றும் படியான எந்தவொரு நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
ஆகவே சுமார் பத்து வருடங்களாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்து கொண்டு செய்யாத சேவைகளை குருநாகல் மாவட்டத்தின் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக வந்து எவ்வாறு செய்யப்போகிறது. நகைச்சுவை பாங்கான முறையில் கொள்கை பிரகடணங்களை தயார் செய்துள்ளனர்.
ஆகவே இவ்வாறான கொள்கை பிரகடணங்களால் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் அணித்திரண்டுள்ளனர்.
இதேவேளை நல்லாட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் நீதியானதாகவும் அமைதியாகவும் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இம்முறை பாராளுமன்ற தேர்தலை நல்லாட்சியை பலப்படுத்தும் செயற்திட்டத்தின் முன்மாதிரியான தேர்தலாக மாற்றியுள்ளோம்.
மேலும் கொழும்பு புளுமென்டல் சம்பவம் பாதாள கோஷ்டிகளுக்கிடையிலான மோதலாக கருதப்படுகின்றது. எனினும் பாதாள கோஷ்டிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. எமது தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் கோஷ்டிகளுடன் தொடர்புப்பட்டதல்ல எமக்கென்று ஒரு கொள்கை உள்ளது. அதனை மீறி எம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் திவீரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்தாக இரகசியங்களை விரைவில் பொலிஸார் வெ ளிப்படுத்துவார்கள் என்றார்.


0 Comments