பெரும்பான்மை இன யுவதியொருவருக்கு அபசரணய் என்ற வார்த்தையைக் கூறியமைக்காக முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு எதிராக களுத்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாக இருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் பாணந்துறையிலிருந்து அளுத்கம வரையிலான நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் கடைகளுக்கு ‘அபசரணய்’ என்றார்.
அவருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குறித்த இளைஞனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
அளுத்கம வன்முறைகள் தொடர்பாக முஸ்லிம்களால் களுத்துறை நீதவான் நீதிமன்றில் 54 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததும் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் அளுத்கமவில் முஸ்லிம் இளைஞரொருவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ‘அபசரணய்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்தமைக்கு எதிராக அளுத்கம பொலிஸாரினால் களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நேற்று இடம் பெற்றது.
அளுத்கம கலவரத்தின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் பொலிஸார் பாதுகாப்பிலிருந்த நிலையில் பத்திராஜ கொட பன்சலைக்கு அழைத்து செல்லப்பட்டு குருமாரினால் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட பின்பே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறித்தும் ஆர்ஆர்டி அமைப்பின் சட்டத்தரணி நீதினம்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் தரப்பினரால் தாக்கிச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை சட்டத்தை மீறிய செயல் என்பதையும் அவர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
களுத்துறை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி ஜனாபா ஆப்தீன் மேலதிக விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை அளுத்கமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ஆர்டி அமைப்பினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


0 Comments