Subscribe Us

header ads

தேர்தல் பிரசாரத்தில் தொடரும் இனவாத உசுப்பேற்றல்


தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட தந்திரோபாயங்களை பயன்படுத்துவர். சில தந்திரோபாயங்களை முறியடிக்க முடியாமல் மறுதரப்புகள் தவிக்கும். சிலருக்கு தேர்தல் பிரசாரம் கைவந்த கலை. தேர்தல் பிரசாரங்களின் போது உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் சில அரசியல்வாதிகள் முன்வைப்பர்.

வாக்களிப்பு நேரத்தில் கூட மக்கள் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்ட சம்பவங்களும் நிறையவே நடந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் ரஜனிகாந் வாக்களித்து விட்டு வெளியே வருகிறார். அந்தக் கணப்பொழுதில் ரஜனிகாந்தை சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று நடிகர் ரஜனிகாந்திடம் கேட்க, ஊழலுக்கு எதிராக வாக்களித்தேன் என்றார்.

கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இருந்த போது, ரஜனிகாந் இப்படிக் கூறியதுதான் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிரான ஊடகங்கள் தவிர்ந்த அனைத்து ஊடகங்களும் ரஜனிகாந் கூறியதை திரும்பத் திரும்ப ஒளிபரப்ப நிலைமை அடியோடு மாறியது.

செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க அமோக வெற்றி பெற ஜெயலலிதா முதலமைச்சரானார்.

தேர்தல் தினத்தன்று ரஜனிகாந் கூறிய ஒரு வார்த்தை சூழ்நிலையை அடியோடு மாற்றி விட்டது. இப்படியாக தேர்தலின் முடிவுகள் பற்றி எதிர்வு கூற முடியாது. எதுவும் எந்நேரமும் நடக்கலாம்.

இருந்தும் இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல் பிரசாரங்களில் தெற்கிலும் வடக்கிலும் ஒரு பொதுவான பிரசாரம் கடைப்பிடிக்கப்படுவதைக் காணமுடியும்.

தென்பகுதியில் அரசியல்வாதிகளின் பிரதான பிரசார கோ­சம் தமிழர்களுக்கு அதிகமான உரிமை கொடுக்கமாட்டோம் என்பதாக இருக்கும்.

13க்கு அப்பால் எந்தத் தீர்வும் கிடையாது என்பது தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களவர்களுக்கு ஆதரவானதுமான ஒரு விடயப் பொருளாகக் காட்டப்படும்.

இலங்கையில் எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டி இருந்த போதிலும் தமிழர்களின் விடயத்தை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்யாவிட்டால் சிங்களக் கட்சிகளுக்குப் பத்தியப்பட மாட்டாது.

இதேபோல் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகத்திலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முதன்மை பெற்றிருக்கும். அவர்கள் 13இற்கு அப்பால் எதுவும் தரமுடியாது என்று கூறினால் நம்மவர்கள் 13ஐ ஏற்க மாட்டோம்; அதற்கும் அப்பால்... அதற்கும் அப்பால்... 2016இல் தீர்வை அடைந்தே தீருவோம் என்பர்.

ஆக, தேர்தல் பிரசாரம் என்பது தெற்கிலும் வடக்கிலும் சிங்களவர், தமிழர் என்ற பகுப்பு நிலையிலேயே பிரசாரம் இடம்பெறுகிறது.

என்ன செய்வது? இனவாதத்தைத் தூண்டி, மக்களை இனவாதத்தினூடாக உசுப்பேத்தி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற கொடுமைகள் நீங்கி, இலங்கையை கல்வியில், முதலீடுகளில், விவசாய உற்பத்திகளில் அபிவிருத்தி அடையச் செய்வோம் என்ற பிரசாரம் என்றைக்கு இந்த நாட்டில் ஒலிக்கிறதோ அன்றைக்குத்தான் இலங்கைத் திருநாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படும்.

Post a Comment

0 Comments