Subscribe Us

header ads

தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கக் கூடாது: சோபித தேரர்


இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தோல்வியடைந்திருந்த வேட்பாளர்களை, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கண்டித்திருக்கிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய சோபித தேரர், தேசியப் பட்டியலில் புத்திஜீவிகளுக்கும் கல்விமான்களுக்குமே இடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தற்போதைய அரசியலமைப்பு தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல அனுமதி அளிப்பதாக உள்ளது. இது சரியானதல்ல.

தேசியப் பட்டியலில் பேராசிரியர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கே இடம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தேர்தலில் தோல்வியடைந்தோருக்கு தமது தேசியப் பட்டியலில் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சி எடுத்திருக்கும் கொள்கை முடிவை சுட்டிக்காட்டியிருக்கும் சோபித தேரர், ஜே.வி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தோல்வியுற்றவர்களையும் தமது தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார்.

தேர்தலில் தோல்விடைந்தவர்களை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியாத வகையில் இலங்கை அரசியல் யாப்பில் திருத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் கூறினார்.

Post a Comment

0 Comments