பொதுவாக நமது சொந்த ஊரில் நாம் படிக்க நினைக்கும் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்காமல்போகும் நிலைமையில்தான் நாம் வேறு ஊருக்குபோக நினைப்போம்.
கல்விக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் அவ்வப்போது அங்கேயே தனிவீடு எடுத்து தங்கிவிடுவதுண்டு. சொந்த ஊரைவிட்டு வெளியேறிய பின்னர், புது இடத்தில் நாம் கிட்டதட்ட அடிமையாகிப் போனதாய் உணருவோம். வீட்டு உரிமையாளர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் கட்டுப்படுவோம்.
ஜெர்மனியில் லியோனி முல்லர்(23) என்பவரின் பாட்டியின் வீடு, அவள் படிக்கும் டுபின்ஜென் நகர பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 530 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடிபுகுந்தார், லியோனி.
வீட்டு உரிமையாளருடன் ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால், அந்த வீட்டைக் காலி செய்தவர் வேறு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளாமல், புது ஊரில் தைரியமாக, தனியாக அதிகபட்ச நேரத்தை ரெயில் பயணத்திலேயே செலவிட்டு வருகிறார்.
முன்னர், பெரும்பாலான நேரத்தை கல்லூரியிலேயே செலவிடும் லியோனி, தூங்க மட்டுமே வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு சென்றார். எனவே, இரவில் மாறி மாறி நினைத்த இடத்தில் தங்கிக்கொள்ளலாம். இதற்கு, தனியாக ஒரு வீடு வேண்டும் என்கிற அவசியம் இல்லை என தனது காதலன் சொன்ன யோசனைப்படி ரெயிலில் மாத பயணத்துக்கான சீசன் டிக்கெட்டை எடுத்துக்கொண்ட அவர், ரெயில் பயணித்துக்கு இடையிலேயே வீட்டுப்பாடம் செய்வது, குளிப்பது என அன்றாட வேலைகளை செய்து வருகிறார்.
தனது தோளை பிரியாமல் இருக்கும் ஒரு கைப்பையில் சோப்பு, சீப்பு, உடைகள், லேப்டாப் என தனது வாழ்க்கைக்கு தேவையான அத்தனையையும் சின்ன பைக்குள் சுருக்கிக் கொண்டுள்ளார். தற்போது இரவுகளில் மட்டும் நண்பர்கள், அம்மா, பாட்டி, காதலன் என யாராவது ஒருவருடன் தங்கிக் கொள்கிறார். மற்றபடி ரெயிலிலேயே வாழ்க்கை நடத்தும் இவருக்கு இந்தப் பயணம்..., தினந்தோறும் புத்தம் புதிய அனுபவங்களைத் தருகிறதாம்
வாரந்தோறும் சுமார் 1200 முதல் 2000 கி.மீட்டர் பயணிக்கும் லியோனி, தற்போது வாழ்க்கையே விடுமுறை நாள்போல கொண்டாட்டமாக இருப்பதாக தெரிவித்தார். பொதுவாக பயணிக்க விரும்பும் பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல எண்ணுவாரே தவிர, உள்நாட்டின் பயணத்தைப் பற்றி கனவுகூட காணமாட்டார் என்கிறார் லியோனி.
இந்த அனுபவங்களை ஒரு ஆய்வாக தொகுத்து, அதையே மேற்படிப்பாக தொடர இருக்கிறார், லியோனி. தங்குவதற்கு நிரந்தரமாக இடமின்றி ரெயிலில் கிட்டதட்ட ஆறு மாதங்களாக குடித்தனம் செய்யும் லியோனி, ஒருவரின் அத்தியாவசிய முத்தேவைகளில் ஒன்றாகவும், வாழ்வாதாரமாகவும் நாம் கருதும் வசிப்பிடம் இல்லாமல்கூட நமது வாழ்வை நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்குள் விதைக்க நினைப்பதாகவும் கூறுகிறார்.
0 Comments