Subscribe Us

header ads

செல்போனில் விஜயகாந்தோடு பேச கேப்டன் ஆப் அறிமுகம்: இளைய தலைமுறையை கவர திட்டம்


ஆள் ஸ்மார்ட்டாக இருக்கிறோமோ இல்லையோ கையில் ஒரு ஸ்மார்ட் போன் வேண்டும் என்பது கிட்டத்தட்ட எல்லோரது விருப்பமும் ஆகி விட்டது.

நவீன தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நினைத்த மாத்திரத்தில் செல்போன் தொடர்பால் லட்சக்கணக்கானவர்களை தொடர்பு கொள்ள முடிகிறது.

இந்த நவீன வசதியை அரசியல் கட்சியினரும் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களோடு தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செல்போனை முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது தே.மு.தி.க. விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி 'கேப்டன் ஆப்' என்ற புதிய செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்த் தீவிரமாக செயல்படுவதில்லை என்ற குறை இருந்து வருகிறது. அதை போக்கும் வகையில் இந்த புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளார்கள்.
இந்த செயலியை உருவாக்கியது, அதில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்த மூளையாக செயல்பட்டவர் பிரேமலதா விஜயகாந்த்.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த 'ஆப்'ஐ செல்போனில் நிறுவி வைத்துக்கொண்டால் போதும். அதை நிறுவுவது மிகவும் எளிது. கூகுள் பிளே ஸ்டோரில் சென்று கேப்டன் என்று டைப் செய்தால் போதும்.

அது கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பித்தால் உடனே நிறுவி விடலாம்.

இந்த செயலியில் விஜயகாந்துடன் உரையாடும் வசதி உள்ளது. அதில் நுழைந்து கேள்வி கேட்டால் அந்த கேள்விக்கு உரிய பதிலை விஜயகாந்த் தெரிவிப்பார். அது கேட்பவரின் இன்பாக்சில் நேரடியாக பதிவாகி விடும்.

மேலும் கட்சி நிகழ்ச்சிகள், அறிக்கைகள், கட்சித் தலைவரால் எடுக்கப்படும் முடிவுகள், போட்டோ காலரி, கட்சி வரலாறு உள்ளிட்ட தகவல்களை பெறலாம்.

கட்சியில் உறுப்பினர் ஆவதற்கும் தனி 'டேப்' உள்ளது. அதில் உள்நுழைந்தால் விவரங்களை பூர்த்தி செய்து உறுப்பினராக சேர்ந்து கொள்ள முடியும்.

முக்கியமாக இளைஞர்களை கவர அறிமுகப்படுத்தி உள்ள இந்த திட்டம் எளிதாக எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும் என்று நம்புவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments