Subscribe Us

header ads

உடல்பருமனால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!


சர்வதேச அளவில் தடுக்க முடியாமல் பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity. இதை நேரடியாக நோய் என்று சொல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால் நிச்சயம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம். இதனிடையே முப்பது நாட்களில் எடை குறைய எளிய முறை என்பதுப் போன்ற விளம்பரத்தைப் பார்த்து சிலர் அதை மூச்சைப் பிடித்துக் கொண்டு கடைப் பிடித்தாலும் கூடி விட்ட எடை குறையவில்லையே என்று விரக்தியுடன் புலம்புவோர்தான் எக்கச்சக்கம்.

அது சரி.. இந்த உடல் பருமன் எப்படி ஏற்படுகிறது? நமது சூற்றுபுறச்சூழல், பழக்கவழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற் பயிற்சியின்மையும்தான் அடிப்படைக் காரணம் பந்திக்கு முந்து என்று சொல்லிக் கொண்டு ஒரு கை பார்க்கும் திருமண விருந்து! பிறந்த நாள் திருமண நாள் பார்ட்டிகள் அலுவலகத்தில் நட்புக்காக கொஞ்சம் ஸ்நாக்ஸ் அது தவிர வீட்டுக்கு போய் சேர்வதற்குள் வழியிலுள்ள சாலையோர பதார்த்தங்கள் வீட்டுக்குச் சென்றதும் மனைவியின் அன்பு வரவேற்புடன் சாப்பாடு இவை எல்லாமே உடல் பருமனுக்கு காரணங்கள் தான் சாப்பிடும் உணவு தான் நம் தோற்றம் குண்டாக காரணம். .முக்கியமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் குழந்தைகளுக்கு அம்மாக் கூட வேண்டாம். ஸ்பீடா கிண்ணம் காலியாகி விடும். வயதானவர்களுக்கோ கேட்கவே வேண்டாம் அத்துடன் பெரும்பாலானோருக்கு டிவியில் பத்து சீரியலோடு நொறுக்குத் தீனியும் தேவை. இதனால் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு, கொழுப்பு பதார்த்தங்கள், சோபா படுக்கை, டிவியே கதி என இருப்பவர்களுக்கு ஏறிய பருமனைப் பற்றி பலருக்கும் பயமே இல்லை என்பதுதான் சோகம்.

அட.. குண்டாக இருந்தால் என்ன? ஏன் இளைக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?. முதலாவது இந்த உடல் பருமனால் தேவையில்லாத பலவித நோய்கள் போட்டி போட்டுக்கொண்டு நம் உடலுக்குள் வந்து விடுகிறது. இதில் முக்கியமானது – உயிருக்கு ஆபத்தை விளாவிக்கும் சர்க்கரை நோய், பித்தப்பை கற்கள், இரத்த கொதிப்பு, இதய நோய், ஸ்ட்ரோக், மார்பக புற்றுநோய், குடல் மற்றும் விரைப்பை (ப்ராஸ்டட்) புற்றுநோய், சிறுநீர் கசிவு, வயிற்றில் ஆசிட் உற்பத்தியால் வரும் GRED, போன்றவை மிக முக்கியமானவை.

இது மட்டுமின்றி அன்றாடம் நம் கடமைகளுக்கும், தேவைகளுக்கும் பிறரை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். குளிப்பது முதல் ஆடை அணிவது வரை ஏன் செருப்பு கூட சிலரால் போட முடிவதில்லை. அவர்களுக்கான ஆடைகளும் பல இடங்களில் சரியாக கிடைப்பதில்லை. சருமத்தில் அரிப்பு படை புண் போன்ற வரும். வழக்கம் போல் நடக்கவும் இயலாது. வீட்டு வேலைகளை செய்யவும் முடியாது. மாடிப்படியில் ஏறவும் முடியாது ஒவ்வொன்றுமே நினைத்தாலே கஷ்டம்தான்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக கணவன் மனைவியரிடையே காரணமே தெரியாமல் நாள்தோறும் சண்டை. மேலும் வேலை செய்யும் இடத்திலோ நாம் காதுப் படவே சக தொழிலாளிகளின் கிண்டல் கேலிகள் இதனால் வேலை கூட சுறு சுறுப்பாக செய்யமுடிவதில்லை. பார்ட்டி திருமணம் எங்கும் செல்ல முடிவதில்லை பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கோ பள்ளியில் கேலிப்பேச்சு தனிமை என்று மனதை வதைக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

மொத்தத்தில் நோய்களும் மன அழுத்தமும் சேர்ந்து உடல் பருமனாக உள்ள ஒருவரை வாழ்க்கையின் எல்லைக்கே கொண்டு போய் விடுகிறது என்று சொன்னால் மிகையல்ல..நோய்களாலும் தாழ்வு மனப்பான்மையினாலும் விரக்தி யடைவதால் இறுதியில் மரணமே மிஞ்சுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஆய்வில் அந்நாட்டில் உயிரிழப்பவர்களில் 6 பேருக்கு ஒருவர் அதிக உடல் பருமன் பிரச்சனையால் இறப்பதாக தெரியவந்துள்ளது. இது அங்கே புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு சமம்.கடந்த 2012- ம் ஆண்டு வரை 15.9 மில்லியன் மக்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், விளையாடுவோர் எண்ணிக்கை இந்த சமீபத்திய ஆய்வுப்படி, 15.5 மில்லியனாக குறைந்துள்ளது. இந்த இறப்பு விகித்தத்துக்கு ஒரு வார காலத்தில் அரை மணி நேரம் கூட உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறித் தனமாக இருப்பதுதான் முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தடுக்க வழி இல்லையா? என்று கேட்டால் மனமிருந்தால் மார்க்கமில்லாமல் போகுமா!?. ஒவ்வொருவரும் தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சியும், கூடவே நொறுக்குத் தீனிகளில் சுயக் கட்டுப்பாடும் கடைப்பிடித்தால் போதும்.. சீரான உடற்பயிற்சியால் புற்றுநோய், இதய நோய்கள், முதுமையால் ஏற்படும் மறதி, மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உட்பட பல நோய்களின் பாதிப்பும் கூட குறையும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக்கும்!

Post a Comment

0 Comments