-Mohamed Muhusi-
புத்தளம் நகரோடு இரண்டறக் கலந்த முள்ளிபுரம் கிராம சேவகர்ப் பிரிவில் உள்ள இல்யாஸ் வத்தை எனும் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் 50 குடும்பங்களின் நீண்ட காலப் பிரச்சினையாக இருந்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு அல்லாஹ்வின் அருளால் தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக இல்யாஸ் வத்தை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சகோ.முஜீப் தலைமையில் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் முதற்கட்டமாக 10 இலட்சம் ரூபாவுக்கான காசோலை குருநாகல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மாலிக் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஒன்றரை இலட்சம் ரூபாவை பெயர் குறிப்பிட விரும்பாத நலன் விரும்பியொருவர் பெருமனதுடன் வழங்கிச் சென்றுள்ளார். அந்த நிதியும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தப்பட்டுள்ளது. الحمد لله
மேலும் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அரசியல், சமூக மற்றும் ஆன்மீகத் துறை பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும். நீர் விஸ்தரிப்பு பணிகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழில் நுட்ப அதிகாரி பிரிஸ்கான் தெரிவித்தார். இம்மக்களின் அடிப்படை சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் அது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
0 Comments