கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மகள் தாமரை செல்வி உடன் இருந்து தாயை கவனித்து வருகிறார். நேற்று இரவு தாய்க்கு உணவு வாங்குவதற்காக தாமரைசெல்வி ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று ரூ.40 கொடுத்து 4 ஆப்பம் வாங்கினார். பின்னர் வார்டுக்கு சென்று தட்டில் ஆப்பத்தை வைத்து சாம்பார் பாக்கெட்டை பிரித்தார். சாம்பாரினுள் கத்திரிக்காய் உள்ளது என நினைத்து ஊற்றினார். அப்போது சாம்பாரில் இருந்து சிறிய எலி ஒன்று பாதி வெந்த நிலையில் விழுந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமரைசெல்வி அந்த சாம்பார் பாக்கெட்டை அப்படியே எடுத்துக் கொண்டு ஓட்டல் ஊழியர்களிடம் காட்டி சரமாரியாக கேள்விகளை கேட்டார்.
இதற்கிடையே, சாம்பாரில் எலி கிடந்த தகவலறிந்து ஆஸ்பத்திரியில் இருந்து பலர் ஓட்டலுக்கு படையெடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஊழியர்கள் ஓட்டலை அடைத்து விட்டு தப்பி ஓடினார்கள். அந்த ஓட்டலின் அருகே இருந்த மேலும் சில ஓட்டல்களும் உடனடியாக மூடப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இன்று சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்தவும், அதன்பேரில் மேல்நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு வகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில் சாம்பாரில் எலி இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதிகாரிகள் மாநகர் பகுதியில் சுகாதார மற்ற உணவுகளை விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை நடத்த வேண்டும், இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கூறினர்.
0 Comments