இந்தோனேஷியாவில் மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் 5 லட்சம் டாலர் பணம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பாபுவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 49 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் 5 பேர் குழந்தைகள் ஆவார்கள்.
பாபுவா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதனுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் திடீரென்று மாயமானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பாபுவா மாகாணத்தின் பின்டாக் மாவட்டத்தில் உள்ள ஒப்பாபே என்ற மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை பார்த்ததாக தெரிவித்தனர். பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததாலும், வானில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததாலும் விமானம் மலையில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானம் மலையில் விழுந்து நொறுங்கியது பற்றிய தகவல் கிடைத்ததும், அந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மலை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்தின் சிதைவு பாகங்களை தேடுதல் பணியில் ஈடுபட்ட விமானம் கண்டு பிடித்து உள்ளது என்றும் தரைவழியாக தேடும் படையானது இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவில் மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் சுமார் 5 லட்சம் டாலர் வரையிலான பணம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணத்தை அந்நாட்டு போஸ்ட் ஆப்பீஸ் அதிகாரிகள் 4 பேர் எடுத்துச் சென்று உள்ளனர். பணம் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் அரசு தரப்பில் கொடுக்க எடுத்து செல்லப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் உள்ளனரா? என்பது குறித்து மீட்பு குழுவினர் எந்தஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விமானம் விபத்துக்குள் சிக்கிய பகுதியை அடைய அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
0 Comments