நாட்டின் தலைவர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அமைந்துவிடக்கூடாது. இந்த விடயத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் விட்ட தவறுகள் தற்போது சீர்தூக்கி பார்க்கப்படுகின்றன. அத்தகைய தவறுகளால் நாடு பெரும் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தமை குறித்தும் தற்போது ஆராயப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று இடம் பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கும்போது உறுதியாக செயற்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு அரசாங்கத்தை உருவாக்கிய பண்டாரநாயக்க நாட்டை குறுகிய காலமே ஆட்சி புரிந்தார். இருந்தபோதிலும் இன்றுவரை நாட்டு மக்களின் மனங்களில் அவர் இடம் பிடித்துள்ளார். இலங்கையை ஆட்சி செய்த தலைவர்கள் கட்சியின் நகர்வுகள் குறித்தும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும், தீர்மானம் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டனர். ஜே. ஆர். ஜயவர்த்தன, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு தனது அமைச்சரவையில் மாத்திரமின்றி முழுநாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் அவற்றை தாண்டி ஒப்பந்தம் செய்தார்.
அதைப்போலவே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதிலிருந்து தன்னைப் பாதுகாக்க பல்வேறு தீர்மானங்களை எடுத்தார். அதேபோன்றே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சியின் போது தீர்மானங்களை எடுக்கும் போது அனைவரினதும் ஆலோசனைக்கு செவிமடுத்தார் என்றும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2003 ஆம் ஆண்டின் போது அதிகாரத்தை தன்வசம் வைத்துக்கொண்டு நாட்டைப் பற்றி சிந்திக்காது கட்சியை மாத்திரம் நினைத்து செயற்பட்டது போல ஜனவரி 8 ஆம் திகதி மக்களினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயகப் புரட்சியை மீளப்பின்னோக்கி நகர்த்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முனைகின்றாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் ஒன்றாக செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இந்தக்காலப்பகுதியில் அமைச்சரவையைக் கொண்டு நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனினும் நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை புறந்தள்ளிவிட்டு தனக்கு நாட்டைவிடவும் கட்சிதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அன்று சந்திரிகா அரசியல் தீர்மானத்தை எடுத்தார். அதன் போது அவர் எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. எனினும் சுதந்திரக்கட்சியினர் அந்த முடிவினை எடுக்கும் நிலைமைக்கு அவரைக் கொண்டுவந்து சேர்த்தனர். தற்போதும் அவ்வாறானதோர் நிலைமை தோன்றியிருக்கின்றது. ஆகவே ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்திய ஜனநாயகப் புரட்சியை பின்நோக்கி செலுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முனைகின்றாரா என்பதை அறியப்படவேண்டிய விடயமாக உள்ளது. ஜனவரிப் புரட்சியை பின்நோக்கி நகர்த்துவதற்கு சுதந்திரக்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்தினை முன்வைத்திருக்கின்றார். 2002 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. நோர்வேயின் அனுசரணையுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்கொண்டு செல்லப்பட்டன. அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்கவே பதவியிலிருந்தார். அன்று அரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளுக்குமிடையே முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்கு எதிராக அன்றைய எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி செயற்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை புலிகளிடம் தாரைவார்த்துவிட்டதாகவும், புலிகளுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர். இந்தக்காலப்பகுதியில் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி முறையிலான தீர்வுக்கு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இணங்கியிருந்தன. இவ்வாறு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதியாக பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்க பலவந்தமாக தனக்குக்கீழ் சுவீகரித்துக்கொண்டார். இதனையடுத்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டது. இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிகா பண்டாரநாயக்க பாராளுமன்றத்தை கலைத்தார். இதனால் நாட்டில் நல்லிணக்க முயற்சிகள் அடியோடு கைவிடப்பட்டன. மீண்டும் யுத்த சூழல் ஏற்பட்டது.
பின்னர் ஜே.வி.பி.யுடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவானது. அன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை கலைத்தமையினால் நாட்டில் வேறுபட்ட ஒரு சூழல் உருவானது. ஜனாதிபதி பதவியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க விலகியபின்னர் தான் அன்று ஐக்கிய தேசிய அரசாங்கத்தை கலைத்தமை பெரும் தவறு என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அன்று மூன்று அமைச்சுக்களைப் பொறுப்பேற்றதுடன் பாராளுமன்றத்தை கலைக்காது விட்டிருந்தால் நாட்டில் நல்லிணக்க முயற்சி முன்னேற்றம் கண்டிருக்கும். ஆனால் அதற்கான சூழல் அன்று சந்திரிகா குமாரதுங்க எடுத்த முடிவினால் இல்லாது போனது.
இதனையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் சுட்டிக்காட்டியதுடன் ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்சியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்நோக்கி நகர்த்தினால் எதிர்காலத்தில் கவலைப்படவேண்டிய நிலை ஏற்படும் என்ற தோரணையிலேயே கருத்து தெரிவித்திருக்கின்றார்.
நாட்டின் தலைவர்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும். ஆனால் எமது நாட்டைப் பொறுத்த வரையில் நாட்டின் நலனைவிட கட்சிகளின் நலனைக் கருத்தில் கொண்டே தலைவர்கள் முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதற்கு 2003 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எடுத்த அவசரமான முடிவு தற்போது வரலாற்றுப் பதிவாகியுள்ளது. தற்போதைய நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எடுக்கின்ற முடிவுகள் நாட்டின் நலனை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. கட்சி நலனும் முக்கியமானதே. ஆனால் அதனை விட நாட்டின் நலன் பெரிது என்பதை தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


0 Comments