அரபு நாட்டில் 20 வருடங்களாக வீட்டு வேலை செய்துவரும் இந்தியப் பெண் மீண்டும் தன் குடும்பத்தினருடன் சேர அஜ்மன் அமீரகத்தில் தனியார் எப்.எம். ரேடியோ உதவியுள்ளது.
கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஷகிதா (62), தனக்கென்று இருந்த வீடு வாசலையும் விற்றுவிட்டு மூன்று மகள்களுக்கும் திருமணத்தை முடித்து வைத்தார்.
மேலும் இந்த திருமணத்திற்காக பட்ட கடன்களை அடைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளாக அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அஜ்மனில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு, சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் தனது கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்பது இவரது வாழ்நாள் லட்சியம். இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அவருடைய கணவர், மற்றும் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட அவரால் செல்ல முடியவில்லை.
அஜ்மனில் செயல்பட்டு வரும் மலையாள எப்.எம். ரேடியோ நிறுவனம் வருடந்தோறும் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்விப்பது வழக்கம். இந்நிலையில் ஷகிதாவின் நிலைமையை அறிந்த அந்த ரேடியோ, அந்த பெண்ணின் கதையை சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிபரப்பியது.
இந்த நிகழ்ச்சியை பற்றி, அதன் வர்ணனையாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அதைப்பார்த்த பலர் அந்த ரேடியா நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஷகிதாவின் முகவரியைப் பெற்று அவருக்கு பண உதவிகளை வழங்கினர்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் ஒரே தொகையாக ஷகிதாவுக்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். துபாயை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும் 3 லட்சம் ரூபாய் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
மலையாள நடிகரான சுரேஷ் கோபியும் அந்த பெண் சொந்த வீடு வாங்க உதவுவதாக வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தனது எல்லா கடன்களையும் விரைவில் அடைக்கவிருக்கும் ஷகிதா, சொந்த நாட்டிற்கு திரும்பி, தன் குடும்பத்துடன் மீண்டும் சேரும் மகிழ்ச்சியில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்.


0 Comments