இலங்கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் உறுப்பினராகவிருந்ததும் விமானத் தாக்குதலில் உயிரிழந்ததையும் அறியாது இவ் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டுள்ளது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குச் பெரும் அச்சுறுத்தலாகும் எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குருநாகலையில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோளும் விடுத்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட இலங்கையின் கலேவலையைச் சேர்ந்த அபு சுரையாஹ் சைலானி என்பவர் சிரியாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இச் செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளியாகின. ஆனால் அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்தச் செய்தி தெரியவில்லை. முதன் முறையாக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் செய்தி இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியவில்லை. இது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தை கடும் போக்கு இனவாதிகள் தமது கையில் எடுத்துக் கொண்டு நாட்டில் இனவாதத்தை தூண்டி அரசியல் நடத்துவதற்கு முன்பாக அரசாங்கம் இப் பிரச்சினையை மிகவும் கவனமாக நிர்வகித்து தீர்வு காணவேண்டும்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தது. இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தோம். அரசு அதனை செவிமடுக்கவில்லை. சபாநாயகரும் அதனை கேலிக் கூத்தாக்கினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் இம்முறை தேர்தலில் குருநாகலையில் போட்டியிடுகின்றார். தனது தலைவரின் இறுதிப் பிரார்த்தனையை நிறைவேற்றவே போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தேர்தலில் மஹிந்தவை தோல்வியடையச் செய்யும் பிரார்த்தனையா வேறு எந்தவிதமான பிரார்த்தனை என்பது தொடர்பில் எதுவுமே தெரியாது. எனவே அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரை கேட்டுக் கொள்கிறோம்.
அவருக்கு ஏதாவது நடந்தால் அந்தப் பழியை எம் மீது சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை மகிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலை வேறு விதமாக சிலர் திசைத்திருப்ப முனைகின்றனர். இது கொழும்பில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலே ஆகும். பாகிஸ்தான் எமது நட்பு நாடு இச்சம்பவத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் டலஸ் அழப்பெரும தெரிவித்தார்.


0 Comments