Subscribe Us

header ads

ஏமன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சவுதி மன்னருடன் ஒபாமா அவசர ஆலோசனை



ஏமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.

ஏமனில் சன்னி வம்சத்தை சேர்ந்த அப்த் ரபு மன்சூர் ஹாடி அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்த ஆட்சியை எதிர்த்து சன்னி வம்சத்துக்கு எதிரான ஹவுத்தி கிளர்ச்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். இந்த ஹவுத்தி போராளிகளுக்கு ஷியா பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்த நாடான ஈரான் மறைமுக ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

அதிபர் அப்த் ரபு மன்சூர் ஹாடிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் இந்த போரில் குதித்துள்ளது. இந்தப் போரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில தற்காலிக நிறுத்தங்களுக்கு இடையில் ஆவேசமாக நடைபெற்றுவரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது மேலும் ஆறு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. 

எனினும், நேற்றுகூட ஏமனின் சில பகுதிகளில் இரு படையினருக்கும் இடையில் மோதல்கள் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியில் இருந்து ஹவுத்தி போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த ஏடன் விமான நிலையத்தை சவுதி படைகளின் உதவியுடன் ஏமன் ராணுவம் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹவுத்தி கிளர்ச்சி படையினரை ஆதரித்து வரும் ஈரான் அரசு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நேற்று அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சவுதி மன்னர் சல்மானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஏமன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் வெள்ளை மாளிகை இன்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments