Subscribe Us

header ads

பொதுபல சேனா விடயத்தில் மஹிந்த ஏன் மௌனமாக இருந்தார் – முபாரக் மௌலவி விளக்கம்


யுத்தத்தை வென்று புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தும் தமது கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காமையே பொதுபல சேனா விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மௌனமாக இருந்ததற்கான பிரதான காணமாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இன்று (02) மாலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான ஆய்வின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கிழக்கு மக்களில் 80 வீதமானேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேச்சைக்கேட்டு ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களித்தனர். அவர் புலிகளுக்கு சார்பானவர் என்பதை நன்கு தெரிந்திருந்தும் முஸ்லிம்கள் அவருக்கே வாக்களித்தனர். பின்னர் 2008ல் கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு கிழக்கு முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற படுபயங்கரத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினால் காப்பாற்றப்பட்ட போதும் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தததை விட புலிகளுக்கு ஆதரவான ஐ தே கவுடன் ஒட்டியிருந்த முஸ்லிம் காங்கிரசுக்கே பெருவாரியான வாக்குகளை முஸ்லிம்கள் அளித்தமை மஹிந்த ராஜபக்ஷ போன்ற பல சிங்கள அரசியல்வாதிகள்; மத்தியில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு ஏற்பட பிரதான காரணமாகும். இதன் காரணமாகவே முஸ்லிம்களுக்கு நான் தங்கத்தை கொடுத்தாலும் அவர்கள் எமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என மஹிந்த அடிக்கடி சொல்லக்கூடியவராக இருந்தார்.

இதன் பின் 2009ம் ஆண்டு புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு முழு வடக்கும், கிழக்கும், முழு நாடும் சுதந்திரம் பெற்றது. இதன் காரணமாக முஸ்லிம் மக்களே பெரு நன்மையை அடைந்தனர். வடக்கில் முஸ்லிம்கள் மீள குடியேற ஆரம்பித்தனர். கிழக்கு முஸ்லிம்கள் அச்சமின்றி அனைத்து இடங்களுக்கும் செல்லும் சுதந்திரம் ஏற்பட்டது. கொழும்பு முஸ்லிம்கள் கூட குண்டு வெடிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெற்றார்கள்.

இந்த நிலையில் 2010 ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை முஸ்லிம்கள் கணிசமாக மிக அதிகமாக மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனாலும் முஸ்லிம்களில் 75 வீதமானோர் மு. காவின் மடத்தனமான பேச்சைக்கேட்டு சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். இத்தகைய முஸ்லிம்களின் நன்றி கெட்ட செயற்பாடே மஹிந்த ராஜபக்ஷவிடமும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிங்கள தலைவர்களிடமும் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சந்தர்ப்பங்களில் உலமா கட்சி போன்ற சிறு கட்சிகள் மஹிந்தவுடன் இணைந்திருந்தாலும் பெரு வாரியான முஸ்லிம்கள் மஹிந்தவுக்கெதிராக வாக்களித்ததால் எம்மைப்போன்ற சிறு கட்சிகளின் கோரிக்கைகளைக்கூட புறந்தள்ளும் நிலை ஏற்பட்டது.

இத்தகைய மனோ நிலையின் காரணமாகவே 2012ம் ஆண்டு பொதுபல சேனா முஸ்லிம்களுக்கெதிராக களமிறங்கிய போது அதனைக்கண்டும் காணாதவராக இருக்கும் நிலைக்கு மஹிந்த ராஜபக்ஷ தள்ளப்பட்டார் என்பதே எனது அபிப்பிராயம். பொதுவாக அவரும் ஒரு மனிதன் என்ற வகையில் ஒரு சமூகத்துக்காக முழுமையாக உதவி செய்தும் அந்த சமூகம் தன்னை ஒரேயடியாக புறக்கணித்தால் எந்த மனிதனுக்கும் அது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலிருந்து மஹிந்த விதி விலக்கு என யாரும் வாதிட முடியாது.


இப்போது இந்த தேர்தலிலும் முஸ்லிம்கள் அதே வரலாற்றுத்தவறை செய்கின்றனர். அதாவது, மஹிந்த வேண்டாம் மைத்திரியே வேண்டும் என கடந்த தேர்தலில் 95 வீதமான முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர். ஆனால் இந்த பொது தேர்தலில் கிழக்கு உட்பட ஏனைய முஸ்லிம்கள் மைத்திரி தலைமையிலான கூட்டணியை நிராகரித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ஐ தே கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் நாளை மைத்திரியும் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் என சிந்திக்கும் நிலை ஏற்படலாம். இதனை அவர் சிந்திக்காவிட்டாலும் அவரோடு உள்ள சுதந்திர கட்சி மீது பாசம் கொண்ட சிங்கள தலைவர்கள் அவருக்கு இந்த எண்ணத்தை தோற்றுவிக்கலாம்.


ஆகவே முஸ்லிம்கள் கடந்த காலங்களைப்போல் தொடர்ந்தும் தவறிழைத்து தமது தலையில் தாமே மண் அள்ளிப்போடுபவர்களாக இல்லாது அறிவப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்பதை பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் தலைமையிலான கட்சி என்ற வகையில் சொல்லி வைக்கிறோம்.

Post a Comment

0 Comments